

புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தினை குழந்தைகளிடத்திலே நாம் ஊக்கப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
105ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரை, ஜி-20 மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டதை தொடர்ந்து இந்தியா மீது உலக மக்களின் ஆர்வம் உயர்ந்துள்ளது. ஜி20 தொடர்பாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பாரதம் வந்திருந்தார்கள். அவர்கள் இங்கிருக்கும் பன்முகத்தன்மை, பல்வேறு பாரம்பரியங்கள், பலவகையான உணவுகள், நமது மரபுகள் ஆகியவை பற்றித் தெரிந்து கொண்டார்கள். இந்திய கலாசாரம், இசை தற்போது உலகளாவியதாகி விட்டது.
செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி, ‘உலக சுற்றுலா தினம்’ வரவிருக்கிறது. சுற்றுலா என்பதை இடங்களுக்குச் சென்று சுற்றிப் பார்ப்பது என்பதாக மட்டும் பார்க்கிறார்கள், ஆனால் சுற்றுலாவின் ஒரு மிகப்பெரிய பக்கம், வேலைவாய்ப்போடு தொடர்புடையது. மிகக் குறைந்த முதலீட்டில், மிக அதிகமான வேலைவாய்ப்பினை ஒரு துறையால் உருவாக்க முடியும் என்றால், அது தான் சுற்றுலாத் துறை.
இந்தியாவில் உலக பாரம்பரிய இடங்களின் எண்ணிக்கை தற்போது 42ஐ எட்டியுள்ளது. நம்முடைய அதிகபட்ச வரலாற்று மற்றும் கலாச்சார இடங்களுக்கு, உலகப் பாரம்பரிய இடங்கள் என்ற அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதே இந்தியாவின் முயற்சியாகும். இன்றைய உலகம் டிஜிட்டல் தொழில்நுட்பம், மின்னணுப் புத்தகங்களுடையது என்பது உண்மை தான் என்றாலும், புத்தகங்கள் நமது வாழ்க்கையில் என்றுமே ஒரு நல்ல நண்பன் என்ற பங்களிப்பை ஆற்றி வருகின்றன.
ஆகையால், புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தினை நாம் குழந்தைகளிடத்திலே ஊக்கப்படுத்த வேண்டும். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மை தொடர்பான பல திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. காந்தி ஜெயந்தியின் போது காதிப் பொருட்களை வாங்குவதை குறிக்கோளாக ஆக்குங்கள். முடிந்தவரை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குங்கள், பயன்படுத்துங்கள், இந்தியப் பொருட்களை வாங்கினால் நமது தொழிலாளர்கள், கைவினைஞர்கள் பயனடைவார்கள்.
பண்டிகைக் காலத்தில் ஒவ்வொரு பண்டிகையையும் முழு உற்சாகத்துடன் கொண்டாடுங்கள். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.