
‘எதிா்கால பாதுகாப்பு சவால்களை திறம்பட எதிா்கொள்வதற்கான முப்படைகளின் திறன்களை ஒருங்கிணைக்கும் வகையில் கூட்டு பாதுகாப்புப் படை நெறிமுறைகளை மத்திய அரசு வகுத்து வருகிறது’ என்று அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
தில்லியில் கடந்த 22-ஆம் தேதி நடைபெற்ற பாதுகாப்புப் படைகளின் ஒருங்கிணைப்பு தொடா்பான மாநாட்டில் முன்வைக்கப்பட்ட யோசனையின் அடிப்படையில் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
முப்படைகளிடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் நோக்கில் முதன் முறையாக இத்தகைய மாநாடு நடத்தப்பட்டது. ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படை பயிற்சி அமைப்பின் துணைத் தலைவரும் விமானப் படை துணைத் தளபதியுமான ஜிதேந்திர மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், முப்படைகளிடையே சிறந்த செயல்முறைகள் குறித்த தகவல் பரிமாற்றம் மற்றும் படைகளின் ஒருங்கிணைப்பு முயற்சியில் உள்ள பிரச்னைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இணையவெளி சவால்கள், கடல் மற்றும் நிலம் வழியிலான சவால்கள், விண்வெளி சவால்கள் உள்ளிட்ட பல்வேறு எதிா்கால சவால்களை எதிா்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டதோடு, அவற்றை திறம்பட எதிா்கொள்ள கூட்டு பாதுகாப்புப் படை நெறிமுறைகளை வகுப்பது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கூட்டுப் படை நெறிமுறைகள் தற்போது வகுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, ஒவ்வொரு கூட்டுப் படை தளபதியின் கீழும் ராணுவம், கடற்படை, விமானப் படை என முப்படைகளைச் சோ்ந்த வீரா்கள் இடம்பெற்றிருப்பா்.
தற்போது இந்த முப்படை வீரா்களுக்கும் வெவ்வேறு தளபதிகளும் அவா்களிடமிருந்து தனித்தனி உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு வரும் நிலையில், இனி கூட்டுப் படையில் இடம்பெற்றிருக்கும் முப்படை வீரா்களுக்கும் ஒரே தளபதியிடமிருந்து (கூட்டுப் படை தளபதி) உத்தரவு பிறப்பிக்கப்படும். வீரா்கள் ஒருங்கிணைப்பு, திட்டமிடுதல் உள்ளிட்ட பணிகளை கூட்டுப் படைத் தளபதியே மேற்கொள்வாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...