மத்தியப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 12 வயது சிறுமி வீடு வீடாகச் சென்று உதவி கேட்ட அவலம் அரங்கேறியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரத்தில் பத்நகர் சாலையில் உள்ள ஆசிரமத்திற்கு அருகே 12 வயது சிறுமி அரை நிர்வாண கோலத்தில் கிடந்துள்ளார். இதனை அந்த ஆசிரமத்தின் சாமியார் ராகுல் சர்மா கவனித்து உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளித்தார்.
இதுதொடர்பாக ஆசிரமத்தின் சாமியார் கூறுகையில்,
ஆசிரமத்தின் வாசலில் அரை நிர்வாண கோலத்தில், கண்கள் வீங்கி, பேசமுடியாத நிலையில் கிடந்த சிறுமியைக் கண்டதும், போலீஸாரை தொடர்பு கொண்டேன். ஆனால் அவர்களை தொடர்புகொள்ள இயலாத நிலையில், அருகிலிருந்த மஹாகால் காவல் நிலையத்திற்குத் தொடர்பு கொண்டு தகவலை அளித்தேன். பின்னர், சிறுமிக்கு என்னுடைய ஆடைகளைக் கொடுத்து உதவினேன்.
பதட்டத்துடனும், பயந்த நிலையிலிருந்த சிறுமியிடம் பாதுகாப்பாக இருப்பதாகவும், பயப்பட வேண்டாம் என்றும் ஆறுதல் கூறினேன். சிறுமியின் பெயர், முகவரியை விசாரித்தேன், ஆனால் மிகவும் பயந்துபோன நிலையிலிருந்த சிறுமி கூறிய விவரங்கள் என்னால் சரியாக புரிந்துகொள்ள இயலவில்லை.
சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து வந்து சிறுமியை மீட்டனர். இதுபற்றிய சிசிடிவி பதிவில் சிறுமியை ஒருவர் துரத்துவதும், சிறுமி வீடு வீடாகச் சென்று உதவி கேட்கும் காட்சியும் பதிவாகியுள்ளது. ஆனால் யாரும் சிறுமிக்கு உதவ முன்வரவில்லை.
இதுதொடர்பாக சிறப்புப் புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் உள்பட மூவர் இதுவரை கைது செய்யப்பட்டு விசாரித்து வருகின்றனர்.
சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிறுமி உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. மேலும் இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.