

காரைக்குடி: பெண்களுக்கு இடஒதுக்கீடு அரசியல் சாசன திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததாக செய்திகள் வந்துள்ளது. அது சட்டமாக உள்ள நிலையில் 7, 8 ஆண்டுகளிலும் அமலுக்கு வராது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள எம்.பி அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சட்டமாகியிருக்கிறது. சட்டம் அமலுக்கு வரவில்லை. அமலுக்கு வர வானவேடிக்கை காட்டுகிறார்கள். இந்த மசோதா 1996-இல் பிரதமர் தேவகௌடா அறிமுகம் செய்தது. அதன்பிறகு பிரதமர் வாஜ்பாய் 2 முறை இந்த மசோதா நிறைவேற்றுவதற்கு முயற்சி எடுத்தும் அது வெல்லவில்லை. அதன்பிறகு கடந்த 9.3.2010-இல் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேறியது. 1996, 1999, 2000, 2010 அனைத்து மசோதாக்களிலும் வேறுபாடு கிடையாது. அதே மசோதா தான் திரும்பத் திரும்ப முயற்சி எடுத்து இறுதியில் நாடாளுமன்றத்தில் ஒரு அவையில் மட்டும் நிறைவேறியது. இப்போது வந்துள்ள மசோதா அப்போதுள்ள அதே மசோதாவை, அதே வரைவுச் சட்டத்தை அறிமுகப்படுத்தி ஒப்புதல் தந்திருந்தால் 2024 தேர்தலுக்கே அமலுக்கு வரும்.
ஆனால் இவர்கள்(பாஜக) விஷமத்தனமாக வேண்டுமென்றே இரண்டு தடைகளை வைத்திருக்கிறார்கள். ஒரு தடை அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும், அடுத்த தடை அந்த சென்சஸ்க்கு பிறகு தொகுதி மறுவரையறை நடத்துவது. இது இரண்டும் தேவையில்லாத தடைகள். இது வேகத்தடை என்று கூற முடியாது. இது நிரந்தரமாக சுவரை எழுப்பிய தடையாகும். அந்த சுவரை உடைத்துக் கொண்டு இந்த சட்டம் எப்போது அமலுக்கு வரும் என்று கேட்டீர்கள் என்றால், என்னுடைய கணக்குப்படி 2024 தேர்தலுக்கும் வராது. 2029 தேர்தலுக்கும் வராது. இதுபற்றி விவாதம் செய்வதற்குத் தயார்.
அதாவது 2011 மக்கள் தொகை கணக்குபடி இதற்கு பொருந்தாது. 2026-க்கு பிறகு மக்கள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இதன் முடிவு வெளியாக 2 ஆண்டுகளாகும். அதன்பின் தொகுதிவரையறை செய்ய வேண்டும். அப்பணி மிக கடுமையானது. கடந்த முறை தொகுதி மறுவரை செய்ய 2012-இல் தொடங்கி 2018-இல் தான் முடிவடைந்தது. இதற்கு 6 ஆண்டுகள் ஆகியுள்ளது. இப்போது 2028-ல் மறுவரை தொடங்கினாலும் 2032-க்குப் பின் முடியும்.
எனவே மகளிர் இடஒதுக்கீடு மசோதா 2024, 2029 ஆகிய தேர்தல்களில் அமலுக்கு வராது. 2034 தேர்தலில் வந்தால் மகிழ்ச்சிக்குரியது. ஆக வேண்டும் என்றே விஷமத்தனமாக இந்த மசோதாவுக்கு தடைக்கற்களை ஏற்படுத்தியுள்ளனர். அரசுக்கு நம்பிக்கை கிடையாது. பெண்களுக்கு இடஒதுக்கீடு என்பது பாஜகவுக்கு நம்பிக்கை இல்லாத ஒரு விஷயம். ஆனால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றியதாக அவர்கள் விளம்பரப்படுத்துகிறார்கள். மசோதா சட்டமாக இருக்கிறது. சட்டம் அமலுக்கு வராது. இன்னும் 7, 8 ஆண்டுகளுக்கு சட்டம் அமலுக்கு வராது என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும்.
சனாதானம் என்பது தமிழ்நாட்டில் சாதியத்தைக் குறிக்கிறது. சாதி பிரிவுகளில் பாகுபாடு உள்ளதைக் குறிக்கிறது. தமிழ்நாட்டில் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை ஒரு கோடி பெண்களுக்கு அரசு கொடுக்கிறது. இதில் விடுபட்டோர் குறித்து அரசு கவனத்திற்கு சென்றுள்ளது. இதில் விண்ணப்பங்களை கனிவோடு பரிசீலித்து மேலும் 10 முதல் 20 லட்சம் பெண்களுக்கு கொடுத்தால் மகிழ்ச்சியடைவேன்.
பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகியிருப்பது மகிழ்ச்சி. ஆனால் அந்த கூட்டணியில் அது இருந்ததுதான் எங்களுக்கு நல்லது. அதனால் ஒரு பக்கம் கூட்டணியிலிருந்து அதிமுக விலகியிருப்பது வருத்தம் தான். காவிரி நதி நீர் பங்கீடு கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி உள்ளது.
தமிழகத்திற்குத் தண்ணீர் தர மறுப்பது குறித்துக் கேட்கிறீர்கள்...
நான் தமிழ்நாட்டினுடைய நாடாளுமன்ற உறுப்பினர். தமிழ்நாட்டின் கோரிக்கையைத்தான் வலியுறுத்த முடியும். அதேபோல கர்நாடக மாநிலத்தின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் மாநிலத்தின் கோரிக்கையைத்தான் வலியுறுத்த முடியும். அதுதான் தர்மம். அதுதான் நியாயம். காவிரி நதிநீர் பங்கீடு ஆணைய தீர்ப்புப்படி தான் தர வேண்டும். காங்கிரஸ் அகில இந்திய கட்சி அந்தந்த மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் கமிட்டி தங்கள் மாநிலங்களுக்கான கோரிக்கைகளை வலியுறுத்துவது தான் நியாயம் என்றார்.
இப்பேட்டியின் போது காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.மாங்குடி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.