இந்தியப் புடவைகளை எரியுங்கள்! வங்கதேச பிரதமர் பதிலடி!!

ஆடைகளை மட்டுமல்ல, மசாலா பொருள்களையும் எதிர்க்கட்சியினர் புறக்கணிப்பார்களா?
இந்தியப் புடவைகளை எரியுங்கள்! வங்கதேச பிரதமர் பதிலடி!!

இந்திய பொருள்களைப் புறக்கணிப்போம் என்ற வங்கதேச எதிர்க்கட்சியின் பிரசாரத்திற்கு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா பதிலடி கொடுத்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர்கள், தங்கள் மனைவி கட்டியுள்ள இந்திய புடவைகளை முதலில் எரியுங்கள் என பதிலளித்துள்ளார்.

வங்கதேச பிரதமரும் அவாமி லீக் கட்சித் தலைவருமான ஷேக் ஹசீனா கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் வங்கதேச பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்தியாவுடன் நட்புறவை பேணி வருகிறார் ஷேக் ஹசீனா. கடந்த பிப்ரவரி மாதம் 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவிற்கு வருகைப் புரிந்தார்.

இந்நிலையில், வங்கதேச தேர்தலில் ஹேக் ஹசீனாவுக்கு இந்தியா உதவியதாக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன.

இதன் எதிரொலியாக இந்திய பொருள்களைப் புறக்கணிப்போம் என்ற பிரசாரத்தை வங்கதேச எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசிய கட்சி தொடங்கியது. சமூகவலைதளங்களில் இந்திய பொருள்களைப் புறக்கணிப்போம் என பலர் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் அமைதிகாத்துவந்த பிரதமர் ஷேக் ஹசீன தற்போது காட்டமாக பதிலளித்துள்ளார். தாகா தலைமை அலுவலகத்தில் பேசிய அவர்,

எதிர்க்கட்சி தலைவர்களின் மனைவி வைத்திருப்பது எத்தனை இந்திய புடவைகள் எத்தனை தெரியுமா? பங்களாதேஷ் தேசிய கட்சி தலைவர்கள் இந்திய பொருள்களை புறக்கணிக்க வலியுறுத்துகிறார். அவர்கள் தங்கள் மனைவியிடம் இருக்கும் இந்திய புடவைகளை புறக்கணிக்காதது ஏன்?

தங்கள் கட்சி அலுவலகம் முன்பு தங்கள் மனைவியின் இந்திய புடவைகளை எரிப்பார்களா? அப்படி செய்தால், உண்மையாகவே அவர்கள் இந்தியப் பொருள்களை புறக்கணிப்பதாக ஏற்றுக்கொள்ளலாம்.

எதிர்க்கட்சி ஆட்சியில் இருக்கும்போது, அவர்களின் மனைவி இந்தியாவிற்கு சென்று புடவைகளை வாங்கிவருவதோடு மட்டுமின்றி, இங்கு விற்பனையும் செய்துள்ளனர். இந்திய ஆடைகளை மட்டுமல்ல, மசாலா பொருள்களையும் அவர்கள் புறக்கணிப்பார்களா?

வெங்காயம், பூண்டு, இஞ்சி உள்ளிட்ட சமையல் பொருள்களை இந்தியாவிலிருந்துதான் இறக்குமதி செய்கிறோம். இவற்றை பயன்படுத்தாமல் அவர்கள் சமையல் செய்து உண்பார்களா? இதற்கு எதிர்க்கட்சி முதலில் பதில் கூற வேண்டும் என கடுமையான கேள்விகளை முன்வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com