தேர்தல் களத்தில் சூடுபிடிக்கும் கச்சத்தீவு விவகாரம்!

மக்களவைத் தேர்தல் களத்தில் சூடுபிடிக்கிறது கச்சத்தீவு விவகாரம்.
தேர்தல் களத்தில் சூடுபிடிக்கும் கச்சத்தீவு விவகாரம்!
Published on
Updated on
1 min read

புது தில்லி: மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் நிலையில், தமிழகத்தில் முதல்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், வழக்கமாக அரசியல் கட்சிகள் கையிலெடுக்கும் சில விவகாரங்களும் வழக்கம் போல சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

அந்த வகையில் முதலிடத்தில் இருப்பது கச்சத்தீவு விவகாரம். இந்த முறை, கச்சத்தீவு விவகாரத்தை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பற்றவைக்க, அது, பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை விமரிசித்து நேற்று அனல் பறக்க வைத்தார். இதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் பதில் கொடுத்திருந்தார்.

அதோடு நிற்குமா? இது தேர்தல் களமாயிற்றே? நேற்று காங்கிரஸ் கட்சியை விமரிசித்திருந்த பிரதமர் மோடி, இன்று திமுகவை விமரிசித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவை விமரிசித்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தை ஆளும் கட்சி மாநில நலன்களைப் பாதுகாக்க எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். கச்சத்தீவை இலங்கைக்கு இந்தியா ஒப்படைத்த விவகாரத்தில் வெளிவரும் புதிய விவரங்கள் திமுகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

திமுகவும் காங்கிரஸ் கட்சியும் குடும்ப ஆட்சியை செய்கிறார்கள். அவர்களுக்கு மக்களைப் பற்றி கவலையில்லை. திமுகவும், காங்கிரஸ் கட்சியிலும் மகன்கள், மகள்களைப் பற்றித்தான் கவலைப்படுகிறார்கள். அவர்களின் அலட்சியத்தால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற பதிலின் அடிப்படையில் நேற்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1974ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் தனது பங்குக்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை விமரிசித்துள்ளார்.

அவர் புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, 1974ஆம் ஆண்டு கடல் எல்லையை எங்கே வைப்பது எனறு இந்தியா - இலங்கை இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது, அப்போது, வரையப்பட்ட எல்லையின்படி, கச்சத்தீவு, இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஒப்பந்தத்தில் மீன்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் கச்சத்தீவு விவகாரம் அவ்வப்போது எழுப்பப்பட்டு வருகிறது. கடந்த 21 முறை கச்சத்தீவு விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன்.

கச்சத்தீவை விட்டுக்கெடுப்பதில் எந்த தயக்கமும் இல்லை என முன்னாள் பிரதமர் நேரு தெரிவித்திருந்தார். இவர்களது பொறுப்பற்ற அணுகுமுறையால், கடந்த 20 ஆண்டுகளில் 6180 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com