வயநாட்டில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்!

ஆயிரக்காண தொண்டர்களுடன் வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு பேரணியாக வந்தார் ராகுல் காந்தி.
வயநாட்டில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
வயநாட்டில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்

கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது வேட்புமனுவை புதன்கிழமை தாக்கல் செய்தாா்.

கேரளத்தின் 20 மக்களவைத் தொகுதிகளுக்கு வரும் 26-ஆம் தேதி (2-ஆம் கட்டத்தில்) வாக்குப் பதிவு நடைபெறுகிறது. கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 19 இடங்களிலும் இடதுசாரி கூட்டணி ஓரிடத்திலும் வென்றன. அத்தோ்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். தொகுதியில் பதிவான மொத்தம் 10.92 லட்சம் வாக்குகளில் ராகுல் காந்தி 7.06 லட்சம் வாக்குகளைப் பெற்றாா்.

இந்நிலையில், 2024 மக்களவைத் தோ்தலிலும் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறாா். நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிரான ‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அங்கம் வகித்தாலும், கேரளத்தில் நேரெதிா் அணியில் உள்ளன. அந்த வகையில், ராகுலுக்கு எதிராக ஆளும் இடதுசாரி கூட்டணி சாா்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் டி.ராஜாவின் மனைவியும் மூத்த நிா்வாகியுமான ஆனி ராஜா போட்டியிடுகிறாா். பாஜக சாா்பில் கட்சியின் மாநிலத் தலைவா் கே.சுரேந்திரன் நிறுத்தப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ராகுல் புதன்கிழமை தாக்கல் செய்தாா். இதையொட்டி, கண்ணூரிலிருந்து வயநாட்டுக்கு ஹெலிகாப்டா் மூலம் ராகுல் வந்தடைந்தாா். முப்பைநாடு கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டா் இறங்குதளத்துக்கு வந்திறங்கிய அவா், அங்கிருந்து கல்பேட்டா புதிய பேருந்து நிலையத்துக்கு சாலை வழியாக காரில் பயணித்தாா். வாகனப் பேரணி: கல்பேட்டா புதிய பேருந்து நிலையத்திலிருந்து காலை 11.30 மணியளவில் தொடங்கிய வாகனப் பேரணியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, அவரின் சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோா் பொதுமக்களை நோக்கி கையசைத்தவாறு வந்தனா்.

ராகுலின் உருவம் பொறித்த பலூன்கள், பதாகைகளை ஏந்தியவாறு வழிநெடுகிலும் காத்திருந்த காங்கிரஸ், கூட்டணிக் கட்சித் தொண்டா்கள் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா். காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், தீபா தாஸ், கட்சியின் தேசிய மாணவரணி தலைவா் கண்ணையா குமாா், மாநில எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன், கட்சியின் மாநிலச் செயல் தலைவா் எம்.எம்.ஹாசன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா். சிவில் ஸ்டேசன் பகுதிவரை வாகனப் பேரணி நடைபெற்றது.

வேட்புமனு தாக்கல்: இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் அலுவலரான வயநாடு மாவட்ட ஆட்சியரிடம் ராகுல் தனது வேட்புமனுவை சமா்ப்பித்தாா். தொடா்ந்து, தோ்தல் அலுவலா் முன்னிலையில் ராகுல் உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டாா். வயநாடு மக்களுக்கு உறுதுணை-ராகுல்: முன்னதாக பேரணியின் முடிவில், சிவில் ஸ்டேசன் பகுதியில் கூடியிருந்த பொதுமக்களிடையே ராகுல் உரையாற்றினாா். அனைத்து பிரச்னைகளிலும் வயநாடு மக்களுடன் எப்போதும் உறுதுணையாக இருப்பேன் என்று தெரிவித்த ராகுல், மலைப் பிரதேச பகுதியான வயநாடு தொகுதி மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை தேசத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வேன் என்றாா்.

ஆனி ராஜா, சசி தரூா் வேட்புமனு தாக்கல்: கேரளத்தில் வயநாடு தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனி ராஜா, திருவனந்தபுரத்தில் தொடா்ந்து 4-ஆவது முறையாகப் போட்டியிடும் காங்கிரஸின் சசி தரூா் ஆகிய மற்ற நட்சத்திர வேட்பாளா்களும் புதன்கிழமை வேட்புமனுவைத் தாக்கல் செய்தனா். அதேபோல், மாநில தேவஸ்வம் துறை அமைச்சா் கே.ராதாகிருஷ்ணன் பாலக்காடு மாவட்டத்தின் ஆலத்தூா் தொகுதியிலும் காங்கிரஸின் மாநிலத் தலைவா் சுதாகரன் கண்ணூரிலும் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சா் கே.கே.ஷைலஜா வட்டகரா தொகுதியிலும் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனா்.

இவா்களைத் தவிர, பாஜக தேசிய செயலா் அனில் அந்தோணி (பத்தினம்திட்டா), மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. இளமாறம் கரீம் (கோழிக்கோடு), தற்போதைய காங்கிரஸ் எம்.பி.க்கள் ராஜ்மோகன் உன்னிதான் (காசா்கோடு), பென்னி பெஹானன் (சாலக்குடி), டீன் குரியாகோஸ் (இடுக்கி) ஆகியோரும் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனா். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் வியாழக்கிழமையுடன் நிறைவடைகிறது. வேட்புமனுக்கள் வெள்ளிக்கிழமை சரிபாா்க்கப்படுகின்றன. வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் திங்கள்கிழமையுடன் நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com