ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்தது ஏன்?- நீதிமன்றம் கேள்வி

ஜாபர் சாதிக்
ஜாபர் சாதிக்

ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்தது ஏன்? என தில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவும், தில்லி காவல் துறையும் இணைந்து,மேற்கு தில்லியில் உள்ள கைலாஷ் பாா்க் பகுதியில் ஒரு தனியாா் கிடங்கில் அண்மையில் சோதனை நடத்தி, மெத்தம்பெட்டமைன் எனும் போதைப் பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 50 கிலோ சூடோஎபிட்ரினை பறிமுதல் செய்தன. இது தொடா்பாக அங்கிருந்த 3 போ் கைது செய்யப்பட்டனா். விசாரணையில், அந்தக் கும்பல் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2,000 கோடி மதிப்புள்ள 3,500 கிலோ சூடோஎபிட்ரினை வெளிநாடுகளுக்கு கடத்தியிருப்பது தெரியவந்தது.

மேலும், கடத்தல் கும்பலுக்கு மூளையாகச் செயல்பட்டது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபா் சாதிக் என்பதும் தெரியவந்தது. இந்தத் தகவல் வெளியானதும் திமுகவிலிருந்து ஜாபா் சாதிக் நிரந்தரமாக நீக்கப்பட்டாா். இந்த வழக்கு தொடா்பாக ஜாபா் சாதிக்கை கைது செய்து மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் சிறையில் அடைத்தனர் . இதனிடையே சென்னை மயிலாப்பூரில் உள்ள ஜாபா் சாதிக் வீட்டில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்ததோடு வீட்டிற்கும் சீல் வைத்தனர்.

இந்த நிலையில் வீட்டிக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி ஜாபர் சாதிக் தரப்பில் தில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்தது ஏன்? என மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு சீல் வைத்த வீட்டை பயன்படுத்துவதில் எவ்வித ஆட்சேனை இல்லை என மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சீல் வைக்கப்பட்டுள்ள வீட்டை ஜாபர் சாதிக் குடும்பத்தினர் பயன்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கி வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com