நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது பாஜகவால் உருவாக்கப்பட்டுள்ள வேலையில்லா திண்டாட்டம் தான் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார்.
வேலையில்லா திண்டாட்டம் குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கார்கே பதிவிட்டுள்ளதாவது, வேலை கிடைக்காமல் நம் நாட்டு இளைஞர்கள் திண்டாடுகிறார்கள். ஆனால் நாம் வெறுமனே கனவு கண்டு கொண்டிருக்கிறோம்.
இந்திய தொழில்நுட்பக் கழகங்கள்(ஐஐடி) மற்றும் இந்திய மேலாண்மை கழகங்கள்(ஐஐஎம்) ஆகிய கல்வி நிறுவனங்களை எடுத்துக்கொண்டால், 12 ஐஐடிகளில் பாயிலும் மாணவர்களில் 30 சதவிகிதத்தினர் மட்டுமே வழக்கமாக நடைபெறும் வளாகத்தேர்வு மூலம் பணிக்கு தேர்வாகாமல் இருப்பதாய் தெரிய வந்துள்ளது.21 ஐஐஎம்களில் 20 சதவிகிதம் மட்டுமே, வளாகத்தேர்வு மூலம் மாணவர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது.
ஐஐடி மற்றும் ஐஐஎம்-களில் இத்தகைய நிலைமை என்றால், நாடு முழுவதும் உள்ள நமது இளைஞர்களின் எதிர்காலத்தை பாஜக எவ்வாறு அழிவுப்பாதைக்கு கொண்டுசென்றுள்ளது என்பதை மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
2014-ஆம் ஆண்டுக்குப் பின், மோடி ஆட்சியில் நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, ஒவ்வொரு ஆண்டும், 70 முதல் 80 லட்சம் இந்திய இளைஞர்கள் பணியில் சேருவதாய் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், 2012 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் வேலைவாய்ப்பு சுத்தமாக இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்மூலம், 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுமென்ற ‘மோடியின் வாக்குறுதி’, கொடுங்கனவாக இளைஞர்களின் மனதிலும் எண்ணத்திலும் ரீங்காரமிட்டு வருகிறது.
இதையடுத்து, காங்கிரஸின் ‘வேலை உறுதித் திட்டம்’ உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, 25 வயதுக்குட்பட்ட எந்தவொரு பட்டயப்படிப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த பட்டதாரிகளும் சட்டரீதியாக வேலை வேண்டுமென்று கோர உரிமை உள்ளது. அவர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும்.
இதன்மூலம், வேலைக்கும் படிப்புக்கும் இடையேயான தடைகள் நீக்கப்படும். அதன்மூலம், நாட்டில் வேலைவாய்ப்புகள் புதிய வளர்ச்சியை சந்திக்கும் என்று பதிவிட்டுள்ளார்.