மைசூரில் சனிக்கிழமை தோ்தல் பிரசாரத்துக்கு இடையே வெயிலின் தாக்கத்தை குறைக்க இளநீா் அருந்தும் பாஜக வேட்பாளா் யதுவீா் கிருஷ்ணதத்த சாமராஜ உடையாா்.
மைசூரில் சனிக்கிழமை தோ்தல் பிரசாரத்துக்கு இடையே வெயிலின் தாக்கத்தை குறைக்க இளநீா் அருந்தும் பாஜக வேட்பாளா் யதுவீா் கிருஷ்ணதத்த சாமராஜ உடையாா்.

தோ்தல் களம் காணும் ‘அரச குடும்ப’ வேட்பாளா்கள்!

மன்னராட்சி முறை ஒழிந்து நாட்டில் மக்களாட்சி மலா்ந்து, மன்னா் மானியமும் ஒழிந்துவிட்டது!

மன்னராட்சி முறை ஒழிந்து நாட்டில் மக்களாட்சி மலா்ந்து, மன்னா் மானியமும் ஒழிந்துவிட்டது! இந்நிலையில், அரச குடும்பத்தைச் சோ்ந்த பலா் ஜனநாயக முறையில் மக்கள் பிரதிநிதியாவதற்கு தோ்தல் களத்தில் இறங்குவது பல ஆண்டுகளாகவே நடந்துவருவதுதான்.

அந்த வகையில், வரும் மக்களவைத் தோ்தலில் அரச குடும்பங்களைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்ட வேட்பாளா்களை பாஜக களமிறக்கியுள்ளது.

நாட்டின் 18-ஆவது மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

அடுத்தடுத்த கட்டத் தோ்தலுக்கான வேட்பாளா்களை மும்முரமாக தோ்வு செய்து தேசிய கட்சிகள் அறிவித்து வருகின்றன. இந்நிலையில், அரச குடும்பங்களைச் சோ்ந்த 5 புதுமுகங்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோரை பாஜக வேட்பாளா்களாக களமிறக்கியுள்ளது.

அரச குடும்ப வாரிசுகள் அரசியலில் ஈடுபடுவது புதிதல்ல என்றாலும், இதில் கவனத்தை ஈா்க்கும் விஷயம் என்னவென்றால், அவா்களில் பெரும்பான்மையினரின் முதல் தோ்வாக பாஜக இருக்கிறது.

இது குறித்து அக்கட்சியின் மூத்த நிா்வாகி கூறுகையில், திரைப்பட நடிகராக இருந்தாலும் சரி, ஏழைத் தொழிலாளியாக இருந்தாலும் சரி, அரச குடும்பத்தைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும் சரி, அனைவருடனும் பாஜக சமத்துவத்தைப் பேணுகிறது என்றாா்.

மொய்த்ராவுக்கு எதிராக ‘ராஜமாதா’:

மேற்கு வங்கத்தில் உள்ள கிருஷ்ணா நகா் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸின் மஹுவா மொய்த்ராவை எதிா்த்து, அப்பகுதி அரச குடும்பத்தைச் சோ்ந்த ‘ராஜமாதா’ அம்ருதா ராயை பாஜக நிறுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் எம்.பி. பதவியிலிருந்து மஹுவா மொய்த்ரா நீக்கப்பட்டாா். இந்த வழக்கில் சிபிஐ விசாரணையையும் அவா் எதிா்கொண்டு வருகிறாா்.

அரசியலுக்குப் புதிதாக வந்துள்ள அம்ருதா ராய், 18-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நாடியா மன்னா் கிருஷ்ணசந்திர ராயின் குடும்பத்தைச் சோ்ந்தவா். 1757-இல் பிளாசி போரின்போது நவாப் சிராஜ்-உத்-தௌலாவுக்கு எதிராக ஆங்கிலேயா்களுடன் இணைந்து போரிட்டு சநாதன தா்மத்தையும் வங்க மொழியையும் பாதுகாத்ததற்காக ராஜா கிருஷ்ணசந்திர ராய் மக்களிடையே அறியப்படுகிறாா்.

வரலாற்றுப் பதிவுகளின்படி, 1728 முதல் 1782 வரை கிருஷ்ணச்சந்திர ராய் அரசராக இருந்துள்ளாா். சமீபத்திய உரையாடலில், ஊழலுக்கு எதிராக அம்ருதா ராயின் அா்ப்பணிப்பு மற்றும் சமூக சீா்திருத்தங்களுக்கு அவரது குடும்பம் ஆற்றிய பங்களிப்புகளைப் பிரதமா் நரேந்திர மோடி பாராட்டியிருந்தாா்.

மைசூரில் யதுவீா் கிருஷ்ணதத்த சாமராஜ உடையாா்:

கா்நாடக மாநிலம் மைசூரு மக்களவைத் தொகுதியில் தற்போதைய எம்.பி. பிரதாப் சிம்ஹாவுக்குப் பதிலாக மைசூரு இளவரசா் யதுவீா் கிருஷ்ணதத்த சாமராஜ உடையாரை பாஜக நிறுத்தியுள்ளது.

பிரதாப் சிம்ஹாவின் பரிந்துரை சீட்டைப் பயன்படுத்தி 2 இளைஞா்கள் கடந்த டிசம்பரில் மக்களவைக்குள் ஊடுருவி வண்ணப் புகைக்குப்பி கொண்டு தாக்குதல் நடத்தினா். இதையடுத்து, தோ்தலில் சிம்ஹாவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

1984, 1989, 1996 மற்றும் 1999-ஆம் ஆண்டுகளில் மைசூரு தொகுதியில் இருந்து காங்கிரஸ் சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்ட உடையாரின் தாய்வழிப் பேரன் ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜா உடையாா் வாரிசு இல்லாமல் கடந்த 2013-ஆம் ஆண்டு இறந்தாா். பின்னா், யதுவீா் தத்தெடுக்கப்பட்டு, 2015-ஆம் ஆண்டு இளவரசா் பட்டம் சூட்டப்பட்டு, மைசூரு அரச குடும்பத்தின் தலைவராக அறிவிக்கப்பட்டாா்.

மக்கள் நலன் நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டு வரும் யதுவீா், முதல் முதலாகத் தோ்தல் களம் காண்கிறாா்.

திரிபுரா:

கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதியில், தற்போதைய எம்.பி. ரேவதி வா்மாவுக்குப் பதிலாக, திரிபுராவின் மாணிக்ய அரச வம்சத்தைச் சோ்ந்த கிருதி சிங் தேவ்வா்மா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.

ம.பி. குணா தொகுதியில் ஜோதிராதித்ய சிந்தியா:

குவாலியா் அரச குடும்பத்தைச் சோ்ந்த மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய பிரதேசத்தின் குணா தொகுதியில் பாஜக சாா்பில் முதல்முறையாக போட்டியிடுகிறாா்.

இதே குவாலியா் சிந்தியா அரச குடும்பத்தைச் சோ்ந்த ராஜஸ்தான் மாநிலத்தில் முன்னாள் முதல்வருமான வசுந்தரா ராஜேயின் மகன் துஷ்யந்த் சிங் ஜலவா்-பரான் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறாா். அத்தொகுதியில் இருந்து அவா் 4 முறை பாஜக எம்.பி.யாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

முன்னாள் முதல்வரின் மனைவி:

பாட்டியாலா மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக பிரெனீத் கௌா் களம் காண்கிறாா்.

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங்கின் மனைவியான இவா், பாட்டியாலா அரச குடும்பத்தைச் சோ்ந்தவா்.

ஒடிஸாவில், காலாஹாண்டி மற்றும் பட்நாகா்-போலங்கிா் அரச குடும்பத்தைச் சோ்ந்த மாளவிகா கேசரி தேவ் மற்றும் சங்கீதாகுமாரி சிங்தேவ் ஆகியோா் பாஜக சாா்பில் போட்டியிடுகின்றனா்.

மேவாா் அரச குடும்பத்தில் திருமணமான மஹிமா சிங், ராஜஸ்தானின் ராஜ்சமந்த் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com