ஏர் இந்தியா விமானி இடைநீக்கம்: மது அருந்தியது காரணமா?

பெண் விமானி பணி நீக்கம்: சுவாச பரிசோதனையில் தோல்வி
ஏர் இந்தியா விமானம் (கோப்புப் படம்)
ஏர் இந்தியா விமானம் (கோப்புப் படம்)

ஏர் இந்தியா பெண் விமானி, விமானத்தை இயக்குவதற்கு முன்பான சுவாச பரிசோதனையில் தகுதியிழந்ததையடுத்து அவரை 3 மாதங்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தில்லியில் இருந்து ஹைதராபாத் செல்லும் போயிங் 787 விமானத்தை இயக்கவிருந்த விமானி பணி நீக்கம் செய்யப்படுவது இதுவே முதன்முறை.

கடந்த வாரம் நடைபெற்ற இந்த நிகழ்வையடுத்து அதிகாரிகள் விமானியை பணி நீக்கம் செய்துள்ளனர்.

ஏர் இந்தியா இது தொடர்பாக எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் அறிவுறுத்தலின்பேரில் ஒவ்வொரு விமான பணியாளரும் அவர்களின் அன்றைய நாளுக்கான முதல் விமான பயணத்துக்கு முன்பு சுவாச பரிசோதனை செய்வது கட்டாயம்.

இந்த பரிசோதனையில் தகுதியிழக்கும் விமானிகளுக்கு எத்தனை முறை அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதைப் பொறுத்து கடுமையான தண்டனை அளிக்கப்படும். விமான பயணத்துக்கு முன்பும் பின்பும் இது பொருந்தும்.

இயக்குநரகத்தின் விதிகளின்படி முதல் முறை தகுதியிழக்கும் விமானி 3 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்படுவார்.

மது அருந்துதல் தொடர்பான விமானிகளுக்கான நிபந்தனைகளை கடந்தாண்டு இயக்குநரகம் திருத்தியது.

மது மட்டுமல்ல, ஆல்கஹால் சேர்மானம் உள்ள எந்த பொருளும் உதாரணத்துக்கு மவுத்வாஷ்/ பற்பசை உள்ளிட்ட பொருள்களையும் விமானிகள் பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் பரிசோதனையில் அவர்கள் தகுதியிழக்க நேரிடும் என இயக்குநரகம் அறிவுறித்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com