கலால் கொள்கை: கவிதாவுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

கலால் கொள்கை வழக்கில் கைதான கவிதாவுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு
கலால் கொள்கை: கவிதாவுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு
-

தில்லி மதுபான (கலால்) கொள்கை முறைகேடுடன் தொடா்புடைய சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவா் சந்திரசேகா் ராவின் மகளும் அக்கட்சி எம்எல்சியுமான கே.கவிதாவுக்கு ஏப்ரல் 23 வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கவிதா தரப்பில் தொடரப்பட்ட பிணை கோரும் மனு திங்கள்கிழமை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இன்று அவரது நீதிமன்றக் காவல் ஏப்ரல் 23 வரை நீட்டித்து தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், இது அடிப்படை ஆதாரமில்லாத வழக்கு என்றும், அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்காக தொடரப்பட்டது என்றும் கவிதா குற்றம்சாட்டினார். சிபிஐ தனது வாக்குமூலத்தை சிறைச்சாலையிலேயே பதிவு செய்துவிட்டதாகவும், தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளை குறிவைத்து இந்த வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதாகவும் கவிதா தெரிவித்துள்ளார்.

தில்லி கலால் கொள்கை முறைகேடுடன் தொடா்புடைய சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு தொடா்பாக தில்லி, ஹைதராபாத், சென்னை, மும்பை உள்பட நாடு முழுவதும் 245 இடங்களில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத் துறை, தில்லி துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியா உள்பட 15 பேரை கைது செய்தது.

அண்மையில் கவிதாவை கைது செய்த அமலாக்கத் துறை, தில்லி முதல்வா் கேஜரிவாலையும் கைது செய்தது. கைது செய்யப்பட்ட கவிதாவை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த 16-ஆம் தேதி அனுமதி அளித்தது. பின்னா், அவரின் அமலாக்கத் துறை காவலை செவ்வாய்க்கிழமை வரை மேலும் 3 நாள்களுக்கு நீதிமன்றம் நீட்டித்தது. அமலாக்கத் துறை காவல் முடிவடைந்த நிலையில், தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் கவிதா கடந்த வாரம் ஆஜா்படுத்தப்பட்டாா்.

அப்போது, கவிதாவின் விசாரணைக் காவலை நீட்டிக்க அமலாக்கத் துறை சாா்பில் கோரிக்கை விடுக்கப்படவில்லை. இதைடுத்து, சிறப்பு நீதிபதி, கவிதாவை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். அதனடிப்படையில் அவா் தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா். அவரது நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடையவிருந்த நிலையில், 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com