
சென்னை: இவர்தான் என் மண்டே மோடிவேஷன் என்று தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில், லாரி ஓட்டுநர் ஒருவரைப் பற்றி பகிர்ந்திருக்கிறார்.
தனது அன்றாட வாழ்வில் நடக்கும் சில சுவாரஸ்யங்கள், தான் ரசித்த விஷயங்கள் பற்றி அவ்வப்போது ஆனந்த் மஹிந்ரா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்வது வழக்கம்.
அந்த வகையில், திங்கள்கிழமையன்று, இன்றைய எனது மோடிவேஷன் என்று லாரி ஓட்டுநர் ராஜேஷ் ரவானியைப் பற்றி பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, 25 ஆண்டுகளுக்கும் மேலாக சரக்கு லாரி ஓட்டுநராக இருக்கும் ராஜேஷ் ரவானி, தனது தொழிலில் உணவு மற்றும் பயணம் தொடர்பான விடியோக்களை எடுத்து பதிவிட்டு வருகிறார், இப்போது இவர், யூடியூப்பில் 1.5 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட பிரபலமாக உள்ளார்.
அவர் தனது சம்பாத்தியத்தில் புதிதாக வீடும் வாங்கியிருக்கிறார்.
உங்கள் வயது எதுவாக இருந்தாலும் சரி, உங்கள் தொழில் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சரி, புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப உங்களை நீங்களே புதுப்பித்துக்கொள்ள எந்த வயதும் ஒருபோதும் தடையாக இருக்காது என்பதை அவர் நிரூபித்துள்ளார்.
அவர் தான் என் மண்டே மோடிவேஷன் (#MondayMotivation) என்று பதிவிட்ட அவரது விடியோவையும் பகிர்ந்துள்ளார்.
இந்த ராஜேஷ் ரவானியைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், தனது வாழ்வாதாரத்துக்காக சரக்கு லாரியை ஓட்டி வரும் ராஜேஷ், சமைப்பதிலும் சாப்பிடுவதிலும் ஆர்வம்கொண்டவர். அவர் சாதாரண பருப்புக் குழம்பாக இருந்தாலும், தேசி சிக்கனாக இருந்தாலும், தனது பயணத்தின் இடையே அவர் சமைத்து ருசியாக சாப்பிடும் விடியோக்கள் பல ரசிகர்களைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது.
தன் வாழ்நாள் முழுக்க வாடகை வீட்டிலேயே இருந்த ராஜேஷ், தற்போது சொந்தமாக வீடு கட்டியுள்ளார். யூடியூப் மூலம் சம்பாதித்து வீடு வாங்கியதில் அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி.
தற்போது தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தன்னைப் பற்றி பேசியிருப்பது அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வளவுப் பெரிய மனிதர் தன்னைப் பற்றி பேசியிருப்பதோடு, தனது விடியோவையும் பகிர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.