
புது தில்லி: நாங்கள் குருடாக இல்லை என்றும், கையும் களவுமாகப் பிடிபட்ட பிறகே மன்னிப்பு வருகிறது என்றும் காட்டமாகவே உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்திருந்தது.
இந்த வழக்கு அடுத்து ஏப்ரல் 16ஆம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது.
அதோடு, மாநில உரிமம் வழங்கும் ஆணையத்தின் செயலற்ற தன்மையும் இவ்வளவு பெரிய விவகாரத்தையும் அது எளிதாக விட்டுவிட்டதையும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. உங்களை தனித்தனியாக பிரித்தெடுப்போம், நீங்கள் செய்ய வேண்டிய வேலையை செய்வதற்கு உங்களுக்கு தைரியம் உள்ளதா? நீங்கள் எல்லாம் அஞ்சலகம் போல செயல்படுகிறீர்கள் என்று வழக்கமானதைக் காட்டிலும் கடுமையாக உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
சட்டத்தை மீறிய பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறிய உத்தரகண்ட் அரசுக்கும் உச்ச நீதிமன்றம் கடும் கோபத்தைத் தெரிவித்துள்ளது.
என்ன வழக்கு?
இந்திய மருத்துவக் கழகம், கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றத்தில் பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிராக ஒரு வழக்குத் தொடர்ந்தது. அதில், பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட விளம்பரத்தில் அலோபதி மருத்துவத்தால் பரப்பப்படும் தவறான கருத்துகள்: மருந்து மற்றும் மருத்துவத் துறையால் பரப்பப்படும் தவறான கருத்துக்களிலிருந்து உங்களையும் நாட்டையும் காப்பாற்றுங்கள் என்று வெளியிட்டிருந்த விளம்பரத்தைச் சுட்டிக்காட்டி இந்த வழக்குத் தொடரப்பட்டது.
மேலும், இந்திய மருத்துவக் கழகம் தொடர்ந்த மனுவில் ராம்தேவ் அலோபதி மருத்துவத்தை "முட்டாள்தனமான மற்றும் மோசமான அறிவியல்" என்று குறிப்பிட்டு, கரோனா இறப்புகளுக்கு அலோபதி மருத்துவம் காரணம் என்று கூறப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டிருந்தது.
பதஞ்சலி நிறுவனத்தின் ஆயுா்வேத தயாரிப்புகள், நவீன மருத்துவ முறைகளால் குணப்படுத்த முடியாத நோய்களை குணப்படுத்தும் என்றுகூறி அந்த நிறுவனத்தால் வெளியிடப்பட்ட விளம்பரத்தை எதிா்த்து, இந்திய மருத்துவச் சங்கம் சாா்பில் தொடரப்பட்ட மனுவை கடந்த ஆண்டு நவம்பரில் விசாரித்த உச்சநீதிமன்றம், தவறான விளம்பரங்கள் குறித்து பதஞ்சலி நிறுவனத்தை எச்சரித்தது.
இதையடுத்து, ‘பதஞ்சலி நிறுவனத்தின் ஆயுா்வேத பொருள்கள் குறித்து எந்தவொரு தவறான விளம்பரங்களும் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் இனி வெளியிடப்படாது’ என்று அந்த நிறுவனம் சாா்பில் ஆஜாரன வழக்குரைஞா் உறுதியளித்தாா். எனினும், சா்ச்சைக்குரிய விளம்பரங்கள் தொடா்ந்து வெளியிட்டு வந்தன.
இந்த விவகாரம் தொடா்பாக கடந்த பிப்ரவரியில் நடந்த விசாரணைபோது, பதஞ்சலி நிறுவனம் மீது உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்தது. ‘ஏற்கெனவே அளித்த உறுதிமொழியை மீறியதற்காக, பதஞ்சலி நிறுவனத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் தொடரக் கூடாது?’ என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினா்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் இருவரும் அண்மையில் மன்னிப்புக் கோரியிருந்தனா். ஆனால், அது வெறும் வாய் வாா்த்தையாக உள்ளது என்று குறிப்பிட்ட நீதிமன்றம், மன்னிப்பை நிராகரிப்பதாக ஏப்ரல் 2ஆம் தேதி தெரிவித்திருந்தது.
இந்தச் சூழலில், யோகா குரு ராம்தேவ் மற்றும் பதஞ்சலி மேலாண் இயக்குநா் பாலகிருஷ்ணா ஆகியோா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதிதாக தனித்தனியே பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
‘ஏற்கெனவே அளித்த உறுதிமொழியை மீறி, பதஞ்சலி நிறுவனம் சாா்பில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்; இந்த தவறுக்காக மிக வருந்துகிறேன். எதிா்காலத்தில் இதுபோல் நிகழாதென உறுதியளிக்கிறேன். நீதிமன்ற உத்தரவை மீறும் எந்த உள்நோக்கமும் எனக்கு இல்லை’ என்று ராம்தேவ் குறிப்பிட்டிருந்தார். இவ்வழக்கில் புதன்கிழமை மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, ராம்தேவ் உள்ளிட்டோரின் மன்னிப்பை ஏற்க மீண்டும் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
நாங்கள் குருடர்கள் அல்ல என்று குறிப்பிட்டிருக்கும் நீதிமன்றம், இது குறித்து மத்திய அரசு அளித்த பதிலிலும் திருப்தியில்லை என்றும் தெரிவித்துவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.