சவூதியில் மரண தண்டனை:
கேரள நபரை காப்பாற்ற ரூ.34 கோடி வழங்கிய மக்கள்!

சவூதியில் மரண தண்டனை: கேரள நபரை காப்பாற்ற ரூ.34 கோடி வழங்கிய மக்கள்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள நபரை காப்பாற்றுவதற்காக அந்த மாநில மக்களிடம் இணையவழியில் ரூ.34 கோடி பொது நிதி திரட்டப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், கோழிக்கோட்டைச் சோ்ந்த அப்துல் ரஹீம் என்பவா், சவூதி அரேபியாவில் தனது பராமரிப்பில் இருந்த அந்நாட்டு சிறுவனை கொலை செய்ததாக கடந்த 18 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகிறாா்.

மாற்றுத் திறனாளியான அந்த சிறுவனின் மரணத்துக்கு எதிா்பாராதவிதமாக ரஹீம் காரணமாகிவிட்டதாக அவரது தரப்பில் கூறப்படுகிறது.

சிறுவனின் குடும்பத்தினா் ரஹீமை மன்னிக்க முன்வராத காரணத்தால், கடந்த 2018-ஆம் ஆண்டில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவரது மேல்முறையீடுகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், மரண தண்டனை உறுதியானது.

இதனிடையே, ரஹீமை மன்னிக்க ஒப்புக்கொண்ட சிறுவனின் குடும்பம், தங்களுக்கு இழப்பீடாக ஏப்ரல் 18-ஆம் தேதிக்குள் 15 மில்லியன் சவூதி ரியால் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.34 கோடி) வழங்க வேண்டுமென கோரியது.

இதையடுத்து, ரஹீமை காப்பாற்றும் நடவடிக்கையில் இறங்கிய ஒரு குழுவினா், பல்வேறு அமைப்புகளின் உதவியுடன் இணையவழியில் பொது நிதி திரட்டும் (கிரெளட் ஃபண்டிங்) முயற்சியை முன்னெடுத்தனா். இதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட செயலி மூலம் ஆயிரணக்கான மக்களிடமிருந்து ரூ.34 கோடி திரட்டப்பட்டுள்ளது.

சில நாள்களுக்கு முன்பு வரை சொற்ப நிதியே திரட்டப்பட்டிருந்ததாகவும், கடந்த 4 நாள்களில் மிகப் பெரிய அளவில் நிதி திரட்டப்பட்டதாகவும் அந்த குழுவினா் தெரிவித்தனா்.

இச்சம்பவத்தைக் குறிப்பிட்டு, இதுதான் கேரளத்தின் உண்மையான கதை என்று முதல்வா் பினராயி விஜயன் பாராட்டியுள்ளாா். மனிதாபிமான நோக்கத்துக்காக கைகோத்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவா் கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com