தேர்தல் பத்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அனைவரும் வருந்துவார்கள் -பிரதமர் மோடி

கருப்புப் பணத்தை ஒழிக்கவே தேர்தல் பத்திரங்கள் முறை அமலானது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தேர்தல் பத்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அனைவரும் வருந்துவார்கள் -பிரதமர் மோடி
படம் | ஏஎன்ஐ

தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அனைவரும் வருந்துவார்கள்

தில்லி பாஜக தலைமையகத்தில் கட்சியின் தோ்தல் அறிக்கையை ஞாயிற்றுக்கிழமை (ஏப். 14) பிரதமா் மோடி வெளியிட்டார். பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பிரதமர் மோடி அளித்துள்ள பேட்டியில், தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அனைவரும் வருந்துவார்கள் எனக் கூறியுள்ளார்.

தேர்தல் பத்திரங்கள் குறித்து பிரதமர் மோடி கூறியதாவது, ”தேர்தலின்போது கருப்புப் பணம் விளையாடுகிறது. இது ஆபத்தானது.தேர்தலில் பாஜக உள்பட அனைத்து கட்சிகளாலும் பணம் செலவிடப்படுகிறது. இந்த பணம் மக்களின் பணம். இந்த நிலையில், தேர்தலில் கருப்பு பணத்தை ஒழிப்பது எப்படி? வெளிப்படைத்தன்மை இருப்பதை உறுதி செய்ய, நீண்ட ஆலோசனைக்கு பிறகு, ஒரு சிறு வழியை கண்டுபிடித்தோம் - தேர்தல் பத்திரங்கள்!

தேர்தல் பத்திரங்கள் இல்லையென்றால் பணம் எங்கிருந்து வந்தது? எப்படி செலவானது என்பது அறியாமல் போய்விடும்.

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு, எந்த நிறுவனம் நிதி அளித்துள்ளது? எப்படி கொடுத்தார்கள்? எங்கே கொடுத்தார்கள்? உள்ளிட்ட விவரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதையே தேர்தல் பத்திரங்களின் வெற்றியாகப் பார்க்கிறேன்.

எதிர்க்கட்சிகள் இதை குறித்து நேர்மையாக சிந்தித்துப் பார்த்தால், தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எண்ணி வருந்தப் போகிறார்கள்” என்றார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 2017-18ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட தேர்தல் பத்திரம் திட்டம் கடந்த 2018-ம் ஆண்டில் அமலுக்கு வந்தது. அதன்படி, ஸ்டேட் வங்கியின் கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும். தனிநபர்கள், நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி, அவற்றை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். தேர்தல் பத்திரங்களை வாங்குபவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் அவற்றில் குறிப்பிடப்படாது.

இந்த நிலையில், தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. ஆகவே, இத்திட்டத்தை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டன.

இதனையடுத்து, தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானது எனக் கூறி அவற்றை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. " தேர்தல் பத்திர முறை திட்டத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றால் அதனை ரத்து செய்யலாம். கருப்பு பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தை அடைய தேர்தல் பத்திரங்களைத் தவிர வேறு வழிகள் உள்ளன.நன்கொடை தருவோர் குறித்த விவரங்களை தெரிவிக்கத் தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. ஆகவே, தேர்தல் பத்திர முறை தொடர்பான மற்ற சட்டத் திருத்த மசோதாக்களும் ரத்து செய்யப்படுகின்றன. தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட அனைத்து பங்களிப்பின் விவரங்களை, நன்கொடை கொடுத்தோர் குறித்த விவரங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிட வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com