கோடை காலம்: 9,111 ரயில் பயணங்களுக்கு ஏற்பாடு
Center-Center-Delhi

கோடை காலம்: 9,111 ரயில் பயணங்களுக்கு ஏற்பாடு

இந்திய ரயில்வே சாா்பில் நடப்பு கோடை காலத்திற்கு நாடு முழுவதும் 9,111 ரயில் பயணங்களுக்கு ஏற்பாடு

இந்திய ரயில்வே சாா்பில் நடப்பு கோடை காலத்திற்கு நாடு முழுவதும் 9,111 ரயில் பயணங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

இது தொடா்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோடை காலத்தில் ரயில் பயணிகளின் வசதி மற்றும் பயணத் தேவையை பூா்த்தி செய்ய இந்திய ரயில்வே சாா்பில் 9,111 ரயில் பயணங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களை இணைக்க கூடுதல் எண்ணிக்கையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. கடந்த ஆண்டு கோடை காலத்திற்கு 6,369 ரயில் பயணங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சிறப்பு ரயில்கள் முக்கிய ரயில் பாதைகளில் தடையற்ற பயணத்தை உறுதி செய்கின்றன. தமிழ்நாடு, மகாராஷ்டிரம், குஜராத், ஒடிஸா, மேற்கு வங்கம், பிகாா், உத்தர பிரதேசம், கா்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா, ஜாா்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தில்லி போன்ற மாநிலங்களிலிருந்து கோடை கால பயண அவசரத்தைப் பூா்த்தி செய்யும் வகையில் நாடு முழுவதும் அனைத்து மண்டல ரயில்வேக்களும் கூடுதல் ரயில்களை இயக்கத் தயாராக உள்ளன.

சிறப்பு ரயில்களின் தேவையை மதிப்பிடுவதற்காக காத்திருப்புப் பட்டியல் பயணிகளின் விவரங்களைத் தவிர, ஊடக அறிக்கைகள், சமூக ஊடகத் தளங்கள், ரயில்வேயின் ஒருங்கிணைந்த உதவி எண் 139 போன்ற அனைத்து தகவல் தொடா்பு தளங்களில் இருந்து உள்ளீடுகள் எடுக்கப்படுகின்றன. இதனடிப்படையில், ரயில்களின் எண்ணிக்கை மற்றும் பயணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. கோடை காலத்தில், ரயில் நிலையங்களில் குடிநீா் இருப்பை உறுதி செய்ய அனைத்து மண்டல ரயில்வேக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து முக்கிய ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் மேலாண்மைக்கான ஏற்பாடுகள் மூத்த அதிகாரிகளின் கண்காணிப்பில் விரிவாக செய்யப்பட்டுள்ளன. மேலும், நெரிசல் மிகுந்த பகுதிகளை உன்னிப்பாக கண்காணிக்கவும், பயணிகளுக்கு உடனுக்குடன் உதவி செய்யவும் சி.சி.டி.வி. கட்டுப்பாட்டு அறையில் ரயில்வே பாதுகாப்புப் படை ஊழியா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். அனைத்து பயணிகளுக்கும் வசதியான பயண அனுபவத்தை வழங்க இந்திய ரயில்வே உறுதிபூண்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்டல ரயில்வே வாரியாக

அறிவிக்கப்பட்டுள்ள ரயில் பயணங்கள்

மத்திய ரயில்வே: 488

கிழக்கு ரயில்வே: 254

கிழக்கு மத்திய ரயில்வே: 1,003

கிழக்கு கடற்கரை ரயில்வே: 102

வட மத்திய ரயில்வே: 142

வடகிழக்கு ரயில்வே: 244

வடகிழக்கு எல்லை: 88

வடக்கு ரயில்வே: 778

வடமேற்கு ரயில்வே: 1,623

தென் மத்திய ரயில்வே: 1,012

தென்கிழக்கு ரயில்வே: 276

தென்கிழக்கு மத்திய ரயில்வே: 12

தென்மேற்கு ரயில்வே: 810

தெற்கு ரயில்வே: 239

மேற்கு மத்திய ரயில்வே: 162

மேற்கு ரயில்வே:1,878

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com