கர்நாடகத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த பாஜக முயற்சி: துணை முதல்வர் டிகே சிவகுமார்

கர்நாடகத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த பாஜக முயற்சி:  துணை முதல்வர் டிகே சிவகுமார்
Published on
Updated on
1 min read

கர்நாடகத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த பாஜக முயற்சிப்பதாக கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஹூபள்ளியில் காங்கிரஸ் தலைவர் ஒருவரின் மகள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சியான பாஜக குற்றஞ்சாட்டி வருகிறது. இதற்கு பதிலளித்த துணை முதல்வர் டிகே சிவகுமார், பாஜக எங்களை அச்சுறுத்தப் பார்க்கிறது. மாநிலத்தில் சிறந்த சட்டம் ஒழுங்கு உள்ளது. மாநிலத்தை ஆளுநர் ஆட்சியின் கீழ் கொண்டுவர பாஜகவினர் விரும்புகின்றனர். ஆனால் அவர்களால் அதை செய்ய முடியாது என்றார்.

கர்நாடக மாநிலம் ஹூபள்ளியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒருவரின் மகள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பலியானவர், நேஹா ஹிரேமத் என்பதும், அவர் கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர் நிரஞ்சனின் மகள் என்பதும் தெரிய வந்துள்ளது. கல்லூரி வளாகத்துக்குள் முகக்கவசம் அணிந்து வந்த நபர், நேஹாவை கத்தியால் குத்தியதில், அவர் பலியாகியுள்ளார்.

கல்லூரியிலிருந்து நேஹா வரும் வரை காத்திருந்த அந்த நபர், அவரைக் கண்மூடித்தனமாக கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து கத்தியோடு தப்பியோடியிருக்கிறார். உடனடியாக விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர், ஃபயாஸ் என்ற இளைஞரைக் கைது செய்தனர். இவர் பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், அதேக் கல்லூரியில் பயிலும் மூத்த மாணவர் என்பதும் தெரிய வந்துள்ளது. தாக்குதல் சம்பவம் நடந்ததும், நேஹா உடனடியாக கிம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் தலைவர்கள் பலரும் அந்த மருத்துவமனைக்கு விரைந்தனர். நேஹா, தனியார் கல்லூரியில் எம்சிஏ முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இவரை, கொலையாளி ஃபயாஸ் காதலிக்குமாறு தொடர்ந்து தொல்லைகொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், நேஹா மறுத்துவிட்டதாகவும், அவர் மீது ஏற்பட்ட கோபத்தில் ஃபயாஸ் இந்த கொலையில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. தன்னை வேண்டாம் என்று நிராகரித்த பெண்ணை, தான் கொலை செய்யப்போவதாக அவர் தனது நண்பர்களிடம் கூறிவந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

கொலையாளியை கைது செய்திருக்கும் காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது, காதலை மறுத்ததால் நடந்த கொலைச் சம்பவமாகக் கருதப்படுகிறது. வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. கொலையாளிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பாஜக மாணவர் அணியினர் கல்லூரி முன்பு போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com