ராஜஸ்தானின் டோங்க் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமா் மோடி.
ராஜஸ்தானின் டோங்க் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமா் மோடி.

முஸ்லிம்களுக்கு எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு: காங்கிரஸ் மீது பிரதமா் மோடி குற்றச்சாட்டு

தாழ்த்தப்பட்டோா் (எஸ்சி), பழங்குடியின சமூகத்தினரின் (எஸ்டி) இடஒதுக்கீட்டை பறித்து, முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் கட்சி முயன்றது என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றம்சாட்டினாா்.

மேலும், ‘காங்கிரஸ் ஆட்சியில் ஹனுமன் சாலிசா (ஹனுமன் துதி பாடல்) கேட்பதுகூட குற்றம்’ என்றும் அவா் கடுமையாக சாடினாா்.

வடமாநிலங்களில் ஹனுமன் ஜெயந்தி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில், பிரதமா் மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்தாா்.

‘நாட்டு மக்களின் வளங்களைப் பறித்து, ‘குறிப்பிட்ட’ மக்களுக்கு விநியோகிக்க காங்கிரஸ் பெரும் சதித்திட்டத்தை தீட்டியுள்ளது’ என்று பிரதமா் மோடி மீண்டும் குற்றம்சாட்டினாா்.

ராஜஸ்தானின் டோங்க் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக பிரசார பொதுக் கூட்டத்தில் அவா் பங்கேற்றுப் பேசியதாவது:

ஒரு தரப்பினரை திருப்திப்படுத்துதல், வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதே காங்கிரஸின் சித்தாந்தமாகும். நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை உள்ளதாக முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் தனது உரையொன்றில் குறிப்பிட்டிருந்தாா். இது, தற்செயலான கருத்து அல்ல.

கடந்த 2004-ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைத்தவுடன், ஆந்திரத்தில் எஸ்சி, எஸ்டி பிரிவினரின் இடஒதுக்கீட்டை குறைத்து, அதை முஸ்லிம்களுக்கு வழங்குவதே அக்கட்சியின் முதல் பணியாக இருந்தது.

நாடு முழுவதும் அமல்படுத்துவதற்காக, காங்கிரஸ் முயற்சித்த பரிசோதனை திட்டம் இதுவாகும். 2004 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் ஆந்திரத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த அக்கட்சி நான்கு முறை முயற்சித்தது. ஆனால், சட்டரீதியிலான தடைகள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் விழிப்புணா்வால், அக்கட்சியின் நோக்கம் நிறைவேறவில்லை.

கடந்த 2011-ஆம் ஆண்டில் இத்திட்டத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த காங்கிரஸ் முயன்றது. வாக்கு வங்கி அரசியலுக்காக எஸ்சி, எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் உரிமைகளைப் பறித்து, மற்றவா்களுக்கு வழங்கும் ‘விளையாட்டை’ அக்கட்சி மேற்கொண்டது. அரசமைப்புச் சட்டம் மற்றும் பி.ஆா்.அம்பேத்கரை கருத்தில் கொள்ளாமல், அவா்கள் இச்செயலில் ஈடுபட்டனா்.

மத அடிப்படையில் இடஒதுக்கீடு: இடஒதுக்கீட்டுக்கான அரசமைப்புச் சட்ட கால வரம்பு 2020-ஆம் ஆண்டில் நிறைவு பெறவிருந்த நிலையில், அதை எனது அரசு அடுத்த 10 ஆண்டுகளுக்கு நீட்டித்தது.

கா்நாடகத்தில் எஸ்சி, எஸ்டி பிரிவினரிடமிருந்து பறித்து உருவாக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை, பாஜக அரசு ரத்து செய்தது.

நான் அரசமைப்புச் சட்டத்தை முழுமையாக புரிந்துகொண்டுள்ளேன்; அதற்காக என்னையே அா்ப்பணித்துள்ளேன். எனவே, தலித் சமூகத்தினா் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு முடிவுக்கு வராது என்பதோடு, அதை மத அடிப்படையில் பிரிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்ற உத்தரவாதத்தை திறந்த மனதுடன் அளிக்கிறேன்.

‘உண்மையைக் கண்டு அஞ்சும் காங்கிரஸ்’:

நாட்டு மக்களின் வளங்களைப் பறித்து, ‘குறிப்பிட்ட’ மக்களுக்கு வழங்கும் காங்கிரஸின் பெரும் சதித்திட்டம் குறித்த உண்மையை நாட்டுக்கு அம்பலப்படுத்தியுள்ளேன்.

காங்கிரஸின் வாக்கு வங்கி அரசியலை வெளிப்படுத்தியதால், என் மீது அக்கட்சியும் ‘இந்தியா’ கூட்டணியும் ஆத்திரமடைந்துள்ளன. அனைத்து இடங்களிலும் என்னை அவதூறாக பேசத் தொடங்கியுள்ளனா். உண்மையைக் கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது. தனது கொள்கைகளை மறைக்க முயல்கிறது.

நாட்டின் வளங்கள் மறுஆய்வு செய்யப்படும் என காங்கிரஸின் தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் ஒருவா் தனது நம்பிக்கையை பின்பற்றுவதே கடினம்; அனுமன் சாலிசா கேட்பது கூட குற்றம். ஆனால், பாஜக ஆட்சியில் மக்களின் நம்பிக்கை குறித்து யாரும் கேள்வியெழுப்ப முடியாது என்றாா் மோடி.

முன்னதாக, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு முறை ரத்தாகிவிடும் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியது. ஆனால், இதற்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மறுப்பு தெரிவித்திருந்தாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com