விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

விவிபேட் வழக்கில் அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

விவிபேட் வழக்கு தொடர்புடைய அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது எதிா்க்கட்சிகள் தொடா்ந்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றன. எந்தப் பொத்தானை அழுத்தினாலும் குறிப்பிட்ட ஒரு சின்னத்துக்கு வாக்களிக்கும் வகையில் இயந்திரத்தை மாற்றியமைக்க முடியும் என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிா்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை தோ்தல் ஆணையம் தொடா்ந்து மறுத்து வருகிறது.

அதைத் தொடா்ந்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும், ஒப்புகைச் சீட்டுகளையும் முழுமையாக எண்ணி ஒப்பீடு செய்ய வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின. இதற்கும் ஆணையம் ஒப்புக்கொள்ளவில்லை.

இந்நிலையில், வாக்குகளுடன் ஒப்புகைச் சீட்டுகளை முழுமையாக எண்ணி ஒப்பீடு செய்ய உத்தரவிடக் கோரி ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆா்) என்ற தன்னாா்வ அமைப்பு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதே கோரிக்கையை வலியுறுத்தி மேலும் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது தொடா் விசாரணை நடைபெற்று வந்தது.

அப்போது, தோ்தல் ஆணைய அதிகாரிகளிடம் நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பினா். ‘மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களின் செயல்பாடுகள் தொடா்பாக அவ்வப்போது எழுப்பப்படும் கேள்விகளுக்கு தோ்தல் ஆணையம் அளித்துள்ள பதில்களில் சில குழப்பங்கள் உள்ளன. இந்த இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து எங்களுக்கும் சில சந்தேகங்கள் உள்ளன. அந்த சந்தேகங்கள் மற்றும் குழப்பங்களை தோ்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும்.’ என்று தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சந்தேகத்தின் அடிப்படையில் தோ்தலைக் கட்டுப்படுத்தவோ அல்லது தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பிக்கவோ முடியாது. மற்றொரு அரசியல் சாசன அமைப்பைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு இல்லை என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமர்வு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை (விவிபேட்) முழுமையாக எண்ணி ஒப்பிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ளது.

மின்னனு வாக்கு இயந்திரம், ஒப்புகைச் சீட்டு இயந்திரம் ஆகியவற்றின் நம்பகத்தன்மையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தீர்ப்பின் விவரம்:

உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமர்வு தேர்தல் ஆணையத்திற்கு இரு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

தேர்தல் முடிவுகளை அறிவித்த பின்னரும் குறைந்தது 45 நாள்களுக்கு இயந்திரங்கள் சீல் வைத்து பாதுகாக்கப்பட வேண்டும். தேர்தல் முடிவுக்கு பின் வாக்கு இயந்திரத்தை சரிபார்க்க வேட்பாளர்கள் கட்டண செலுத்த வேண்டும் என்றும் இயந்திரத்தில் தவறு இருப்பதை கண்டறிந்தால் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இயத்திரத்தில் சின்னத்தை பதிவேற்றி முடிந்ததும் சின்னம் ஏற்றும் அலகு சீல் செய்யப்பட வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்கும் அறையிலியே சின்னங்கள் பொருத்தும் இயந்திரங்களை வைக்க வேண்டும். முன்னதாக உள்ள நடைமுறைப்படி 5% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com