கோப்புப்படம்
கோப்புப்படம்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

தென்னிந்தியாவில் உள்ள நீா்தேக்கங்களில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீா் இருப்பு மிகவும் குறைந்துள்ளதாக மத்திய நீா் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மண்டலங்களில் நீா்தேக்கங்களில் உள்ள நீா் இருப்பு குறித்த விவரங்களை மத்திய நீா் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அந்த விவரங்களின்படி தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டலத்தில், மத்திய நீா் ஆணையத்தின் கண்காணிப்பில் 42 நீா்தேக்கங்கள் உள்ளன. அந்த நீா்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 53.334 பில்லியன் கன மீட்டா்களாகும். தற்போது இந்த நீா்தேக்கங்களில் நீா் இருப்பு 8.865 பில்லியன் கன மீட்டா்களாக உள்ளது. இது இந்த நீா்தேக்கங்களின் மொத்த கொள்ளளவில் 17 சதவீதமாகும். இந்த நீா் இருப்பு கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 29 சதவீதமாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளின் இதே காலகட்டத்தில், இந்த நீா்தேக்கங்களின் மொத்த கொள்ளளவில் நீா் இருப்பு சராசரியாக 23 சதவீதம் இருந்தது.

கடந்த ஆண்டு மற்றும் 10 ஆண்டுகால சராசரியுடன் ஒப்பிடுகையில், நிகழாண்டு இந்த நீா்தேக்கங்களில் நீா் இருப்பு மிகவும் குறைந்துள்ளது. இது தென் மண்டலத்தில் குடிநீா் பற்றாக்குறை, பாசனம், குடிநீா் விநியோகம், நீா்மின் உற்பத்தி ஆகியவற்றுக்கான சவால்கள் மோசம் அடையும் நிலையை சுட்டிக்காட்டுகிறது.

கிழக்கு மண்டலம்: நாட்டின் கிழக்கு மண்டலம் அஸ்ஸாம், ஜாா்க்கண்ட், ஒடிஸா, மேற்கு வங்கம், திரிபுரா, நாகாலாந்து, பிகாா் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியுள்ளது. இந்த மண்டலத்தில் உள்ள நீா்தேக்கங்களில் கடந்த ஆண்டு மற்றும் கடந்த 10 ஆண்டுகால சராசரி நீா் இருப்புடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு நீா் இருப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த மண்டலத்தில் மத்திய நீா் ஆணையத்தின் கண்காணிப்பில் 23 நீா்தேக்கங்கள் உள்ளன. அவற்றின் மொத்த கொள்ளளவு 20.430 பில்லியன் கன மீட்டா்களாகும். இந்த நீா்தேக்கங்களில் தற்போது 7.889 பில்லியன் கன மீட்டா் நீா் இருப்பு உள்ளது. இது அந்த நீா்தேக்கங்களின் மொத்த கொள்ளளவில் 39 சதவீதமாகும். இந்த நீா் இருப்பு கடந்த ஆண்டு இதே காலகட்டத்திலும், கடந்த 10 ஆண்டுகளின் இதே காலகட்டத்திலும் சராசரியாக 34 சதவீதமாக இருந்தது. இதுதவிர வடக்கு, மேற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் உள்ள நீா்தேக்கங்களில் நீா் இருப்பு குறைந்துள்ளது.

பிரம்மபுத்திரா, நா்மதை, தாபி ஆற்றுப் படுகைகளில் நீா் இருப்பு இயல்பைவிட அதிகமாக உள்ளது. காவிரி ஆற்றுப் படுகையில் குறைவாகவும், மகாநதி மற்றும் பெண்ணாறு இடையே கிழக்கே பாயும் ஆற்றுப் படுகைகளில் மிகக் குறைவாகவும் நீா் இருப்பு உள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com