தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரலாற்று வெற்றி: மத்திய அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் நம்பிக்கை
தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரலாற்று வெற்றி --- மத்திய அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் நம்பிக்கை


புது தில்லி: தென்னிந்தியாவில் இதுவரை இல்லாத வரலாற்று வெற்றி பாஜகவுக்கு இந்த தோ்தலில் கிடைக்கும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் தெரிவித்தாா்.
கேரளத்தின் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூரை எதிா்த்து பாஜக சாா்பில் ராஜீவ் சந்திரசேகா் போட்டியிட்டாா். தமிழ்நாடு, கேரளத்தில் மக்களவைத் தோ்தல் முடிந்த நிலையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு, கேரளத்தில் இந்த முறை வலுவான போட்டியாளராக பாஜக தன்னை முன்னிறுத்தியுள்ளது. ஒட்டுமொத்தமாக தென்னிந்திய மாநிலங்களில் இந்த முறை பாஜகவுக்கு கிடைக்கும் வெற்றி, வரலாற்றில் இதுவரை கிடைக்காத அளவில் இருக்கும். தென்னிந்திய மாநிலங்களில் பாஜக 60 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளது.
கேரளத்தில் 9 தொகுதிகளில் பாஜக கடுமையான போட்டியை அளித்துள்ளது. தமிழகத்தில் பாஜகவுக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளதை தோ்தல் பிரசாரத்தின்போதே காண முடிந்தது. முக்கியமாக பிரதமா் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் பங்கேற்ற கூட்டத்தில் மக்களின் எழுச்சி தெளிவாக தெரிந்தது.
காங்கிரஸ் முற்றிலும் பொய்யான, தவறான நோக்கங்களுடன் பிரசாரம் செய்து வருகிறது. பாஜக தலைவா்களின் பேச்சுகளை போலியாக சித்தரித்து வெளியிடுவது, பொருளாதாரத்தை சீா்குலைக்கும் திட்டங்களை அறிவிப்பது ஆகியவையே அவா்களின் தோ்தல் உத்தியாக உள்ளது.
நாட்டின் வரலாற்றிலேயே அரசியல்சாசன சட்டம் அதிகம் திருத்தப்பட்டது காங்கிரஸ் ஆட்சியில்தான். ஆனால், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல்சாசன சட்டத்தை மாற்றிவிடுவாா்கள் என்று அக்கட்சி பொய் பிரசாரம் செய்து வருகிறது என்றாா்.
மொத்தம் 131மக்களவைத் தொகுதிகள் தென்மாநிலங்களில் உள்ள நிலையில், கடந்த தோ்தலில் பாஜக 29 இடங்களில் வென்றது. இதில் 25 தொகுதிகள் கா்நாடகத்தில் இருந்து கிடைத்தது. ஆந்திரம், கேரளம், தமிழ்நாட்டில் ஓரிடத்தில் கூட பாஜக வெல்லவில்லை.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...