பன்னுன் கொலை முயற்சி பின்னணியில் இந்திய புலனாய்வு அதிகாரிகள்: வாஷிங்டன் போஸ்ட்

பன்னுன் கொலை முயற்சி பின்னணியில் இந்திய புலனாய்வு அதிகாரிகள் இருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
பன்னுன் கொலை முயற்சி பின்னணியில் இந்திய புலனாய்வு அதிகாரிகள்: வாஷிங்டன் போஸ்ட்

புது தில்லி: அமெரிக்காவில், காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சி சம்பவத்தில் இந்திய புலனாய்வு அதிகாரி, ரா அமைப்பின் முன்னாள் தலைவர் விக்ரம் யாதவுக்கு தொடர்பிருப்பதாக தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பன்னுன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் திட்டத்துக்கு இந்திய புலனாய்வு அமைப்பின் தலைவர் சமந்த் கோயல் அனுமதியளித்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் முக்கிய தலைவராக செயல்பட்டு வருபவர் பன்னுன். சீக்கியர்களுக்கான நீதி (எஸ்எஃப்ஜே) என்ற அமைப்பின் சட்ட ஆலோசகராகவும் செய்தித் தொடர்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பானது சீக்கியர்களுக்கு தனி நாடு கோரி போராடி வருகிறது. இந்திய அரசால், இவர் காலிஸ்தான் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் பன்னுன் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சி தாக்குதலில், நிகில் குப்தா என்பவரின் பெயர் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர் இந்திய அரசின் சார்பில் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்திய போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல்காரரான நிகில் குப்தா, இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட கூலிப் படையாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக விவரிக்கப்படுகிறது.

வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம், யாதவ் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்க தவிர்த்துவிட்டிருக்கிறது. எப்படியிருந்தாலும், இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில், இப்படி இந்திய அதிகாரிகளின் பெயர் கொலை முயற்சி சம்பவத்தில் தொடர்புபடுத்தப்படுவது அனைவரது புருவங்களையும் உயர்த்தியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாதவ் பெயரைக் குறிப்பிட்டு "இந்த படுகொலையானது தற்பொழுது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது" என பதிவு செய்யப்பட்டுள்ள வாஷிங்டன் போஸ்ட் அறிக்கையில், கடந்த ஆண்டு பன்னுன் பற்றிய விவரங்கள் மற்றும் நியூயார்க் முகவரி உள்ளிட்ட விஷயங்களை யாதவ் அளித்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்திருந்ததையும் குறிப்பிட்டுள்ளது.

கொலைத் திட்டத்தின் பின்னணியில் இந்திய உளவுப் பிரிவுக்கு தொடர்பு இருப்பதை பல தெளிவான ஆதாரங்கள் நிரூபித்தாலும் நேரடியாகவே இந்த கொலைத் திட்டத்தின் இந்திய புலனாய்வு அதிகாரிகள் தொடர்பு இருப்பது தெரியவந்தாலும், இதுவரை யாதவின் அடையாளம் மற்றும் தொடர்பு, வெளியிடப்படவில்லை. இந்த கொலைத் திட்டம் அமெரிக்க காவல் அதிகாரிகளால் முறியடிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இந்த கொலை திட்டத்துக்கு இந்திய ரா அமைப்பின் தலைவராக அப்போதிருந்த சமந்த் கோயல் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த கொலைத் திட்டத்துக்கான பல்வேறு விவரங்களை, முன்னாள் இந்திய பாதுகாப்புத் துறை மூத்த அதிகாரி ஒருவர் தொடர்ந்து கண்காணித்து அவரது மேற்பார்வையில் நடத்தப்பட்டதாகவும், காலிஸ்தான் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டிருக்கும் பன்னுன்-ஐ கொலை செய்ய வேண்டும் என்று கோயலுக்கு மேலிடத்திலிருந்து கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் வாஷிங்டன் போஸ்ட் தெரிவிக்கிறது.

மோடியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீக்கிய அமைப்பாளர்கள் மீது ரா நடத்தும் இந்த கொலைத் திட்டங்களை அறிந்திருக்கலாம் என்று அமெரிக்க உளவு அமைப்புகள் கருதினாலும், ஆதாரம் எதுவும் வெளிவரவில்லை என்று அதனை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்க நாடுகளில் புலம்பெயர்ந்திருக்கும் இந்திய மக்களுக்கு எதிராக நடக்கும் பிரசாரங்களை ஒடுக்கும் வகையில்தான் ரா நடத்திய இந்த கொலை திட்டம் முறியடிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி வாஷிங்டன் போஸ்ட் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அமெரிக்காவில் பன்னுன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அந்த கொலைச் சம்பவத்திலும் யாதவ் மீது குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது. இவ்விரண்டு படுகொலை மற்றும் கொலை முயற்சி சம்பவம், பாகிஸ்தானில் நடந்த வன்முறைகளுக்கு இடையே நடந்தேறியிருக்கிறது.

மோடி அரசால், பிரிவினைவாதிகள் அல்லது பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி நாடு கடத்தப்பட்ட 11 சீக்கிய அல்லது காஷ்மீர் பிரிவினைவாதிகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

வாஷிங்டன் போஸ்ட் அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்திய அதிகாரிகள் அது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

அமெரிக்காவின் பன்னுன் மீது நடந்த தாக்குதல் சம்பவம் குறித்து அமெரிக்க அரசு வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளித்த மத்திய வெளியுறவு விவகாரத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், விவகாரம் குறித்து விசாரிக்க உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தரப்பிலிருந்து நமக்கு பகிரப்பட்ட தகவல்கள் தொடர்பாக அது விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவங்கள் நமது தேசிய பாதுகாப்பையும் பாதிக்கும் என்பதால் அதிக கவனம் செலுத்தப்படுகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com