இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 - 6.5% தான், 8 - 8.5% அல்ல! -ரகுராம் ராஜன்

எதிர்பார்த்ததை விட மந்த கதியில் இந்திய பொருளாதார வளர்ச்சி -ரகுராம் ராஜன் விமர்சனம்
இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 - 6.5% தான், 8 - 8.5% அல்ல! -ரகுராம் ராஜன்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8 - 8.5 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், யதார்த்தத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6 - 6.5 சதவிகிதமாக மட்டுமே இருக்கும் என்று கணித்துள்ளார் ரிசர்வ் வங்கி முன்னாள் இயக்குநர் ரகுராம் ராஜன்.

2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த நாடு என்ற இலக்கை இந்தியா அடைய வேண்டுமெனில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9 - 10 சதவிகிதம் என்ற அளவில் தொடர வேண்டுமென ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நார்த் வெஸ்டெர்ன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் உற்பத்தித் துறை மற்றும் சேவை துறையைக் காட்டிலும், வேளாண் துறையில் தொழிலாளர் பற்றாக்குறை பெருமளவில் நிலவுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நாட்டில், வேளாண் துறையின் வளர்ச்சி கேள்விக்குறியாக இருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

கரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய காலகட்ட நிலவரத்தை ஒப்பிடுகையில், வசதியானோர் அதிகளவில் பயன்படுத்தும் நான்கு சக்கர வாகன விற்பனை அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், ஆனால், நடுத்தர வர்க்கத்தினர் பயன்படுத்தும், இருசக்கர வாகன விற்பனை ஒப்பீட்டளவில் அதிகரிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம், நடுத்தர வர்க்கத்தினரின் வளர்ச்சியை அறிந்துகொள்ள முடியுமென குறிப்பிட்டுள்ளார் அவர். பொருளாதாரம் ஏற்றம் பெற, தனிநபர் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது மிக முக்கியமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாணயத்தின் இருபக்கம் போல இந்திய பொருளாதாரம் திகழ்வதாகவும், ஒரு பக்கம், ஆப்பிள் போன்ற பெரு நிறுவனங்களின் உயர்மட்ட முதலீடுகள் இந்தியாவில் ஈர்க்கப்படுகின்றன. மறுபக்கம், நடுத்தர, ஏழை வர்க்கத்தினர் வேலைவாய்ப்புக்காக அல்லாடுகின்றனர் என்றும் விமர்சித்துள்ளார்.

இதனிடையே, 2024-2025 நிதியாண்டில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம், 7 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுவதாக ’தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில்(என்சிஏஇஆர்)’ கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com