
வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்கள் குறித்த தரவுகளை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரகம் வெளியிட்டுள்ளது.
புது தில்லியில் ஜூலை 31, புதன்கிழமை, நடைபெற்ற மாநிலங்களவைக் கூட்டத்தில் பங்கேற்ற கேரளத்தின் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. டாக்டர் ஜான் பிரிட்டாஸ் வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறித்து விளக்கம் கேட்டிருந்தார். இதனையடுத்து, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரகம் வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை சமர்ப்பித்துள்ளது.
சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளில் தெரிவித்திருப்பதாவது, கடந்த ஆறு ஆண்டுகளில் வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.
2019ஆம் ஆண்டில், வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 6,75,541ஆக இருந்தது; ஆனால், தற்போதைய 2024ஆம் ஆண்டில் 13,35,878ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாக கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் சர்வதேச கல்விக்கு இந்திய மாணவர்களின் விருப்பம் அதிகரித்து வருகிறது.
கனடாவில் 4,27,000 மாணவர்களும், அமெரிக்காவில் 3,37,630 மாணவர்களும், இங்கிலாந்தில் 1,85,000 மாணவர்களும், ஆஸ்திரேலியாவில் 1,22,202 மாணவர்களும், ஜெர்மனியில் 42,997 மாணவர்களும் படித்து வருகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், வெளிநாடுகளுக்குச் சென்ற மாணவர்களின் மாநில வாரியான தரவுகளை பராமரிக்கவில்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கூடுதல் தகவல்களாக, 2019 முதல் 2024 வரையிலான கடந்த 5 ஆண்டுகளில், விபத்துக்கள் மற்றும் வன்முறைத் தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அதிக எண்ணிக்கையிலாக கனடாவில் 172 பேரும், அமெரிக்காவில் 108 ஆகவும் உள்ளது.
அடுத்ததாக, இங்கிலாந்தில் 58 பேரும், ஆஸ்திரேலியாவில் 57 பேரும், ரஷ்யாவில் 37 பேரும், ஜெர்மனியில் 24 பேரும், பாகிஸ்தானில் ஒருவர் என மொத்தம் 41 நாடுகளில் 633 இந்திய மாணவர்களின் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக, கடந்த வாரம் நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் தெரிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.