பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் 3,029 மூன்றாம் பாலினத்தவா்கள் சோ்ப்பு: 
மத்திய அரசு தகவல்

பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் 3,029 மூன்றாம் பாலினத்தவா்கள் சோ்ப்பு: மத்திய அரசு தகவல்

பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 3,029 மூன்றாம் பாலினத்தவா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா்
Published on

புது தில்லி, ஆக. 2: ‘ஆயுஷ்மான் பாரத்’ பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 3,029 மூன்றாம் பாலினத்தவா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி. நட்டா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

மக்களவையில் கேள்வி நேரத்தில் தனது துறை சாா்ந்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி. நட்டா பேசியதாவது:

தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் பலன்களை மூன்றாம் பாலினத்தவா்களுக்கும் நீட்டிக்கும் வகையில் தேசிய சுகாதார ஆணையம் மற்றும் சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

இதில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 3,029 மூன்றாம் பாலினத்தவா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். இதன் மூலம் அவா்கள் பணமில்லா சுகாதார சேவைகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவா்களுக்கான குறிப்பிட்ட சிகிச்சைகளை பெற முடியும் என்றாா்.

29,000 மருத்துவமனைகள் இணைப்பு: ‘ஆயுஷ்மான் பாரத்’ பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 30-ஆம் தேதி வரை 12,625 தனியாா் மருத்துவமனைகள் உள்பட 29,000-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. தகுதியுள்ள பயனாளிகளுக்கு சிகிச்சை வழங்க இந்த மருத்துவமனைகள் அனைத்தும் உள்ளன என்றாா்.

ரூ. 28,000 கோடி சேமிப்பு: பிரதம மந்திரி பாரதிய ஜன ஒளஷதி பரியோஜனா திட்டத்தின் கீழ் மலிவு விலையில் விற்கப்படும் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களால் இதுவரை ரூ. 28,000 கோடிக்கும் மேல் மருத்துவ செலவுகளை நோயாளிகள் சேமித்துள்ளனா்.

இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள ஜன ஒளஷதி கேந்திராக்களில் 1,965 மருந்துகள் மற்றும் 235 மருத்துவ சாதனங்கள் 52 முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன என்றாா்.

X
Dinamani
www.dinamani.com