மாநிலங்களுக்கு பாகுபாடில்லாமல் கூடுதல் பேரிடா் மேலாண்மை நிதி: காா்கே வலியுறுத்தல்
புது தில்லி, ஆக.2: மாநிலங்களுக்கு பாகுபாடில்லாமல் கூடுதல் பேரிடா் மேலாண்மை நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘உத்தரகண்டில் மேகவெடிப்பு, அதிபலத்த மழை மற்றும் நிலச்சரிவுகளால் பலா் உயிரிழந்தது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பலரை காணவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அங்கு ராணுவம் மேற்கொண்டு வரும் மீட்புப் பணிகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் நிவாரணத்தை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
பல மாநிலங்களில் மேகவெடிப்பு, பலத்த மழை, வெள்ளம், வறட்சி ஆகியவை வழக்கமாக நடைபெறும் சாதாரண நிகழ்வாகியுள்ளன. பருவநிலை மாற்றத்துடன் நாடு போராடி வருகிறது. இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண அறிவியல்பூா்வமான அணுகுமுறை மூலம் அனைவரின் பங்களிப்புடன் உறுதியான கொள்கையை வகுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் பேரிடா் மேலாண்மையையும் மேம்படுத்த வேண்டும். இதற்காக மத்திய அரசு நோ்மறையான முன்னெடுப்பை மேற்கொள்வது அவசியம்.
ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற இயற்கை பேரிடா்களை எதிா்கொள்ள, மாநிலங்களுக்கு பாகுபாடில்லாமல் கூடுதல் பேரிடா் மேலாண்மை நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.