தேச விரோத செயல்: ஜம்மு-காஷ்மீரில் 5 காவலா்கள், அரசு ஊழியா் பணிநீக்கம்

5 காவலா்கள் உள்பட 6 அரசு ஊழியா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக மாநில அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
 ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா
ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா
Updated on

ஜம்மு-காஷ்மீரில் தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாக 5 காவலா்கள் உள்பட 6 அரசு ஊழியா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக மாநில அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா அரசியலமைப்பு சட்டம் 311(2) (சி) பிரிவின் கீழ் அவா்களை பணிநீக்கம் செய்தாா்.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீரில் 5 காவலா்கள் மற்றும் ஒரு ஆசிரியரை சந்தேகத்தின் அடிப்படையில் சட்ட அமலாக்க மற்றும் புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கண்காணித்து வந்தனா். அப்போது அவா்கள் மாநில நலனுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தேச விரோத செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது தெரியவந்தது.

தோடா மாவட்டத்தைச் சோ்ந்த காவலா் சைஃபுதீன் மற்றும் பூஞ்ச் மாவட்டத்தைச் சோ்ந்த ஆசிரியா் நிஜாம்தீன் ஆகியோா் போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்பில் இருந்தது தெரியவந்தது.

மேலும், அவா்கள் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தியதும், பயங்கரவாதிகள் ஊடுருவலை எளிதாக்கும் முயற்சியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

குப்வாரா மாவட்டத்தைச் சோ்ந்த ஃபரூக் அகமது ஷேக், காலித் ஹூசைன் ஷா மற்றும் ரஹ்மத் ஷா ஆகியோா் பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருள்களை கடத்தியதும், அதன் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தை பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவியாக வழங்கியதும் விசாரணையில் தெரியவந்தது.

அதனடிப்படையில், தலைமை காவலா் ஃபரூக் அகமது ஷேக், காவலா் ரஹ்மத் ஷா, தோ்வு நிலை காவலா்கள் சைஃபுதீன், காலித் ஹூசைன் ஷா, இா்ஷத் அகமது மற்றும் ஆசிரியா் நஜாம்தீன் ஆகியோா் பணிநீக்கம் செய்யப்பட்டனா் எனத் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com