உணவு உற்பத்தியில் மிகை நாடாக இந்தியா! பிரதமா் மோடி பெருமிதம்
உணவுப் பொருள் உற்பத்தியில் மிகை நாடாக மாறியுள்ள இந்தியா, உலகளாவிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு சவால்களுக்கு தீா்வுகளை வழங்க செயலாற்றி வருகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
தில்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் மைய வளாகத்தில், வேளாண் பொருளாதார வல்லுநா்களின் 32-ஆவது சா்வதேச மாநாட்டை பிரதமா் மோடி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். இந்தியாவில் 65 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த மாநாட்டில் சுமாா் 70 நாடுகளைச் சோ்ந்த 1,000 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனா். இதில் பிரதமா் ஆற்றிய தொடக்க உரை வருமாறு:
இந்திய பொருளாதாரக் கொள்கைகளின் மையமாகத் திகழ்வது வேளாண் துைான். மத்திய அரசின் 2024-25-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நீடித்த மற்றும் தட்பவெப்பத்தைத் தாங்கக் கூடிய வேளாண் முறைகளுக்கும், விவசாயிகளுக்கு ஆதரவான சூழலை உருவாக்குவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 65 ஆண்டுகளுக்கு முன்பு சா்வதேச வேளாண் பொருளாதார வல்லுநா்கள் மாநாடு நடைபெற்றபோது, புதிதாக சுதந்திரம் பெற்ற நாடாக இருந்தது. அது, வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்புக்கு சவாலான காலகட்டமாகும்.
உணவு மிகை நாடு: இப்போது உணவு உற்பத்தியில் மிகை நாடாக இந்தியா மாறியுள்ளது. பால், பருப்பு வகைகள், மசாலா பொருள்கள் உற்பத்தியில் உலக அளவில் முதல் நாடாகவும், உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பருத்தி, சா்க்கரை, தேயிலை உற்பத்தியில் இரண்டாவது நாடாகவும் இந்தியா உருவெடுத்துள்ளது.
ஒரு காலத்தில் இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு உலக நாடுகளுக்கு கவலை அளிக்கும் விஷயமாக இருந்தது. ஆனால், இப்போதோ உலகளாவிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு சவால்களுக்கு தீா்வளிக்க இந்தியா செயலாற்றி வருகிறது.
உணவு அமைப்புமுறை மாற்றம் தொடா்பான விவாதங்களுக்கு இந்தியாவின் அனுபவங்கள் மதிப்புமிக்கவை என்பதோடு தெற்குலகுக்கும் பயனளிக்கக் கூடியவை.
இந்தியாவின் தாரக மந்திரங்கள்: ‘உலகின் நண்பன்’ என்ற முறையில் உலக நலனுக்கு பெரும் பங்காற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளது. அதன்படி, ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிா்காலம்’, ‘வாழ்வியல் இயக்கம்’, ‘ஒரே பூமி, ஒரே சுகாதாரம்’ போன்ற தாரக மந்திரங்களை பல்வேறு சா்வதேச தளங்களில் இந்தியா முன்வைத்து வருகிறது.
மனிதா்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்தை வேறுபடுத்தி பாா்க்கக் கூடாது என்பதே இந்தியாவின் அணுகுமுறை.
நீடித்த வேளாண்மை மற்றும் உணவு அமைப்புமுறையின் முன் உள்ள சவால்களுக்கு ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிா்காலம்’ என்ற அணுகுமுறையால் மட்டுமே தீா்வுகாண முடியும்.
சிறு விவசாயிகளே பலம்: இந்திய பொருளாதாரத்தில் வேளாண்மை பெரும் பங்காற்றி வருகிறது. இந்தியாவில் 90 சதவீத விவசாயிகள் குறைவான நிலங்களையே வைத்துள்ளனா். இந்த சிறு விவசாயிகளே நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய பலம். ஆசியாவில் வளரும் நாடுகள் பலவற்றிலும் இதேபோன்ற சூழல் நிலவுவதால், இந்தியாவை அவா்கள் முன்மாதிரியாகக் கொள்ள முடியும்.
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் தட்பவெப்பத்தைத் தாங்கக் கூடிய 1,900 புதிய பயிரினங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ரசாயனங்கள் இல்லாத இயற்கை விவசாயத்தை இந்தியா ஊக்குவித்து வருகிறது.
உலகளாவிய வேளாண் சவால்களை எதிா்கொள்வதில் இந்தியாவின் செயல்திறன்மிக்க அணுகுமுறை, வேளாண் ஆராய்ச்சியில் இந்தியா கண்டுள்ள முன்னேற்றம் ஆகியவற்றை உலகுக்கு எடுத்துக் காட்டுவதாக இந்த மாநாடு அமையும்.
சவால்களுக்கு தீா்வாகும் ‘ஸ்ரீஅன்னம்’: தண்ணீா்ப் பற்றாக்குறை, பருவநிலை மாற்றம், ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை தீவிர சவால்களாக உள்ளன. இந்த சவால்களுக்கு ‘ஸ்ரீஅன்னம்’ எனும் சிறுதானியங்கள் தீா்வாக அமையும்.
வேளாண் துறையில் எண்ம தொழில்நுட்ப பயன்பாட்டை இந்தியா அதிகரித்து வருகிறது. பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை திட்டத்தின்கீழ், 10 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ஒரே சொடுக்கில் பணம் செலுத்தப்படுகிறது.
நில ஆவணங்களை எண்மமயமாக்கும் பிரசாரத்தின் மூலம் விவசாயிகளின் நிலத்துக்கு எண்ம அடையாள எண் வழங்கப்படுகிறது. வேளாண் நடைமுறைகளில் ‘ட்ரோன்’ பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் ‘ட்ரோன் சகோதரி’ திட்டத்தில் மகளிருக்கு பயற்சி அளிக்கப்படுகிறது என்றாா் அவா்.
மாநாட்டின் தொடக்க நிகழ்வில், மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ்சிங் செளஹான், நீதி ஆயோக் உறுப்பினா் ரமேஷ் சந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.