குகைக்குள் 3 குழந்தைகளைப் பார்த்ததும்.. பழங்குடியின குடும்பத்தை மீட்ட வீரர்களின் அனுபவம்

குழந்தைகள் புன்னகைத்தபோது வலிகள் மறைந்துபோனது.. பழங்குடியின குடும்பத்தை மீட்ட வீரர்களின் மறக்கமுடியாத அனுபவம்.
குகைக்குள் 3 குழந்தைகளைப் பார்த்ததும்.. பழங்குடியின குடும்பத்தை மீட்ட வீரர்களின் அனுபவம்
Published on
Updated on
2 min read

வயநாடு மாவட்டத்தின் சூரல்மலை, அட்டமலை உள்ளிட்ட பகுதிகள் நிலச்சரிவின் கோரப்பிடியில் உருகுலைந்து போயிருக்கும் நிலையில், அட்டமலை வனப்பகுதியிலிருந்து பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தை நான்கு பேர் கொண்ட வனத் துறை அதிகாரிகள் மீட்டது அதிசயத்துக்கும் அப்பாற்பட்டதாக மாறியிருக்கிறது.

இவர்களது மீட்புப் பணி குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நிலச்சரிவு பாதித்த வயநாடு மாவட்டத்தின் வனப்பகுதியிலிருந்து பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆறு பேர், எங்களது மிகத் தீரமிக்க வனத்துறை அதிகாரிகள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இருண்ட காலங்களில் கேரளத்தின் போராடும் ஆற்றல் இன்னும் பிரகாசமாகவே பிரகாசிக்கிறது என்பதை இவர்களது வீரம் நமக்கு நினைவூட்டுகிறது. நம்பிக்கையுடன் ஒன்றிணைந்து, மீண்டும் கட்டியெழுப்புவோம் மற்றும் வலுவாக வெளிப்படுவோம் என்று பதிவிட்டுள்ளார். வனத்துறை அதிகாரியுடன் பழங்குடியின குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

குகைக்குள் 3 குழந்தைகளைப் பார்த்ததும்.. பழங்குடியின குடும்பத்தை மீட்ட வீரர்களின் அனுபவம்
முண்டக்கைக்கு இயக்கப்பட்ட கடைசிப் பேருந்து.. சாட்சியானது!

வெறும் மீட்புப் பணி என்றில்லாமல், தங்களது உயிரை பயணம் வைத்து நடத்தப்பட்ட மீட்புப் பணி என்று உலகமே கொண்டாடுகிறது கேரள வனத்துறை அதிகாரிகளை. பழங்குடியின குடும்பம் சிக்கியிருக்கும் இடத்தை அடைந்து திரும்ப, மீட்புக் குழுவுக்கு எட்டு மணி நேரம் ஆனது, சுமார் ஏழு கிலோ மீட்டர் தொலைவுக்கு அவர்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் நடந்த சென்றுள்ளனர். கல்பெட்டை ரேஞ்ச் வனத்துறை அதிகாரி ஆஷிஃப் கெலோத் தலைமையில், வன அதிகாரிகள் ஜெயச்சந்திரன், அனில் குமார், அனூப் தாமஸ் ஆகியோர் இந்த அரும்பணியை மேற்கொண்டிருந்தனர்.

தங்களது இன்னுயிரை பணயம் வைத்தே அவர்கள் இந்த மீட்புப் பணியில் இறங்கினர்.

வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிகள் தொடங்கியபோது, வனத்துக்குள் ஒரு பெண்ணும், சிறு குழந்தையும் நடமாடிக்கொண்டிருந்ததைப் பார்த்தோம். அவர்கள் உணவுக்காக அலைந்துகொண்டிருந்தனர். எங்களைப் பார்த்ததும் அடர்ந்த வனத்துக்குள் சென்றுவிட்டார்.

இரண்டு நாள்கள் கழித்து அதே பெண், குழந்தையுடன் காணப்பட்டார், ஆனால், இந்த முறை அவர் அதிகாரிகளைப் பார்த்து ஓடவில்லை. உடனடியாக அவருக்கு போர்வை வழங்கியிருக்கிறார்கள். அங்கிருந்து விடியோ கால் அழைப்பு மூலம் மருத்துவக் குழுவினரைத் தொடர்புகொண்டு அவர்களது உடல்நிலையை பரிசோதிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

மருத்துவர்களும், பெண்ணையும் குழந்தையையும் பார்த்து, அவர்களுக்கு பெரிய உடல்நலப் பிரச்னைகள் இல்லை என்று உறுதி அளித்தனர்.

பிறகு அப்பெண்ணிடம் பேச்சு கொடுத்தபோது, அவரது பெயர் சாந்தா என்றும், தனது குடும்பம் எராட்டுகுண்டு ஊரு பகுதியில் வசிப்பதாகவும், அங்குதான் தனது மற்ற மூன்று பிள்ளைகளும் கணவரும், ஒரு குகைக்குள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடுமையான மழை பெய்துகொண்டிருக்கிறது, அடர்ந்த வனப்பகுதி, அவர்களை பத்திரமாக பாதுகாப்பான இடத்துக்கு இடமாற்றம் செய்வது அவசியம் என்பதை குழுவினர் உணர்ந்தனர்.

இதுபற்றி அவர்கள் கூறுகையில், மிகப்பெரிய கயிறுகளின் உதவியோடு எராட்டுகுண்டுவுக்குச் சென்றோம், அங்குதான், மிகப்பெரிய பள்ளத்தாக்குகள், அடர்ந்த பனிமூட்டம், வழுக்குப் பாறைகள், பயங்கர ஏற்ற இறக்கங்கள் இருப்பதைப் பார்த்து இயற்கையின் ரகசியத்தைப் பார்த்து வியந்தபடி சென்றோம். ஒருவேளை, வழியில் இருந்த ஒரு பெரிய பள்ளத்தில் யாரேனும் விழுந்தால், அவர்களது உடலைக் கூட மீட்க முடியாது என்ற நிலை இருந்தது.

வெறும் கயிறை மட்டும் எடுத்துக்கொண்டு இப்பகுதிகளைக் கடந்தோம். பெரிய பெரிய மரங்களில் கட்டிக்கொண்டு இறங்கி ஏறினோம். நான்கு மணி நேரம் இப்படியே பயணித்து குகையை அடைந்தோம். அங்கு சாந்தாவின் கணவர் கிருஷ்ணன், மூன்று, இரண்டு, ஒரு வயதில் என மூன்று குழந்தைகள் துணி கூட இல்லாமல் இருந்ததைப் பார்த்து கண் கலங்கிவிட்டோம் என்கிறார்கள் அதிகாரிகள்.

உடனடியாக குழந்தைகளை கையில் எடுத்துக்கொண்டு நாங்கள் கொண்டு சென்ற போர்வையை கிழித்து குழந்தைகளின் உடலை மூடினோம், உணவு மற்றும் தண்ணீர் கொடுத்தோம், பிறகுதான் அடுத்த சவால்.. கிருஷ்ணன் எங்களுடன் வர மறுத்தார், ஒட்டுமொத்த குடும்பமும் இதுவரை வேற்று மனிதர்களைப் பார்த்ததே இல்லை போல, அவர்கள் எங்களைப் பார்த்ததும் அச்சமடைந்தனர். பிறகு, சாந்தாவுக்கு உடம்பு சரியில்லை, அங்கு அழைத்துச் செல்கிறோம் என்று கூறித்தான், அழைத்து வந்தோம். மூன்று குழந்தைகளையும் எங்களுடன் சேர்த்துக் கட்டிக்கொண்டோம்.

வரும்போதை விடவும் இப்போது குழந்தைகளுடன் திரும்புவது இன்னும் சவாலாக மாறியது, ஒரு கயிறு அறுந்தாலோ, கயிறு கட்டிய மரம் விழுந்தாலோ எங்கள் உயிர் எங்களுடையது அல்ல. திரும்புவதற்கு நான்கரை மணி நேரம் ஆனது.

மலையின் நுனிப்பகுதியில் உள்ள முகாமுக்கு வந்தடைந்தோம், அங்கு அவர்களுக்கு உணவு கொடுத்தோம். சாந்தாவையும் அங்கு அழைத்து வந்தோம். அதற்குள் இரவு வந்துவிட்டது, அங்கு சில அத்தியாவசியப் பொருள்களை அவர்களுக்கு வழங்கவிட்டு அங்கேயே பத்திரமாக இருக்குமாறு கூறினோம். ஆனால், அவர்கள் அங்கிருந்து மீண்டும் அவர்களது குகைக்குத் திரும்பிவிடுவார்கள் என்றுதான் நினைத்தோம். மறுநாள் காலையில் அந்த முகாமுக்குச் சென்றபோது, நாங்கள் நினைத்தது போல நடக்கவில்லை. அவர்கள் அங்குதான் இருந்தார்கள். பிறந்தது முதல் இதுவரை வேற்று மனிதர்களையே பார்த்திடாத அந்தக் குழந்தைகள் எங்களைப் பார்த்ததும் புன்னகைத்தன. அப்போது அவர்களுக்காக நாங்கள் ஏராளமான உணவு, உடை, புதிய காலணிகளை வாங்கி வந்திருந்தோம்.

குழந்தைகள் முதல்முறை அப்போதுதான் காலணியை பார்த்தன. அணிந்துகொண்டு மகிழ்ந்தன. எங்களைப் பார்த்து சிரித்த அந்த நிமிடம், அவர்களை மீட்கச் சென்றபோது எங்கள் உடல்களில் ஏற்பட்ட காயங்களில் இருந்த வலிகள் அனைத்தும் மறைந்துபோனது, நாங்கள் பட்ட சிரமங்களும் பயனுள்ளதாக மாறியதாக மனம் நிறைவு கொண்டது என்று கூறி முடிக்கிறார் ஆஷிப் கெலோத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com