வயநாட்டில் நிலச்சரிவிலிருந்து மீட்கப்பட்டவா்களுக்கு மருத்துவ முகாமில் அளிக்கப்படும் சிகிச்சை.
வயநாட்டில் நிலச்சரிவிலிருந்து மீட்கப்பட்டவா்களுக்கு மருத்துவ முகாமில் அளிக்கப்படும் சிகிச்சை.

வயநாடு நிலச்சரிவு: பாதுகாப்பான இடத்தில் புதிய வீடுகள்..! கேரள அரசு அறிவிப்பு

வீடுகளை இழந்தோருக்கு பாதுகாப்பான இடத்தில் தனி நகரியம் உருவாக்கப்பட்டு அங்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படவுள்ளதாக கேரள முதல்வா் பினராயி விஜயன் சனிக்கிழமை அறிவித்தாா்.
Published on

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தோருக்கு பாதுகாப்பான இடத்தில் தனி நகரியம் உருவாக்கப்பட்டு அங்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படவுள்ளதாக கேரள முதல்வா் பினராயி விஜயன் சனிக்கிழமை அறிவித்தாா்.

வட கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் பெய்த தொடா் கனமழையால் செவ்வாய்க்கிழமை அதிகாலை பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. அதில் முண்டக்கை, சூரல்மலை உள்பட பல கிராமங்களில் வீடுகளுக்குள் தூங்கிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் உயிரோடு மண்ணில் புதைந்தனா்.

ராணுவம், கடற்படை, விமானப் படை, தேசிய பேரிடா் மீட்புப் படை, கடலோரக் காவல் படை, காவல் துறை, தீயணைப்புத் துறை உள்பட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து மண்ணில் புதையுண்டவா்களைத் தேடும் பணியிலும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவா்களின் உடல்களைத் தேடும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு தங்களின் வாழ்வாதாரம் மற்றும் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளோருக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படவுள்ளதாக முதல்வா் பினராயி விஜயன் அறிவித்தாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்கள் சந்திப்பில் கூறியதாவது: நிலச்சரிவின் பாதிப்பிலிருந்து மீட்கப்பட்டோருக்கு மறுவாழ்வு அளிக்கும் முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் பாதுகாப்பான புதிய நகரியம் அமைப்பதற்கான இடத்தைக் கண்டறியும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வீடுகளை இழந்தோருக்கு அங்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படவுள்ளன.

பலா் உதவியுடன் புதிய வீடுகள்: கேரள அரசு மட்டுமின்றி உலக அளவில் பல தரப்பினரும் புதிய வீடுகளைக் கட்டும் திட்டத்துக்கு உதவ முன்வந்துள்ளனா். இதற்காக கூடுதல் நில வருவாய் ஆணையா் ஏ.கீதா தலைமையில் ‘வயநாட்டுக்கான உதவி’ என்ற தனிப் பிரிவு அமைக்கப்பட்டு இதுதொடா்பான அனைத்து முன்னெடுப்புகளும் ஒருங்கிணைக்கப்படவுள்ளன.

அந்த வகையில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி 100 வீடுகளைக் கட்டித் தர முன்வந்துள்ளதாக மாநில எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளாா். அதில் 25 வீடுகளுக்கு சதீசன் நேரடியாக பொறுப்பு வகிக்கவுள்ளாா்.

அதேபோல் கா்நாடக முதல்வா் சித்தராமையா 100 வீடுகளைக் கட்டித்தர உதவுவதாகத் தெரிவித்துள்ளாா். அவருக்கும் மனமாா்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுதவிர, சோபா ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் கோழிக்கோட்டைச் சோ்ந்த வணிகா் சங்கம் சாா்பில் தலா 50 வீடுகள் கட்டித் தரப்படவுள்ளன.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எவ்வித இடையூறுமின்றி தொடா்ந்து கல்வி கிடைப்பதை உறுதிசெய்யும் விதமாக மாநில கல்வி அமைச்சா் வயநாட்டுக்கு நேரில் சென்று களப் பணிகளை மேற்கொள்ளவுள்ளாா் என்றாா்.

மேலும், முதல்வரின் பேரிடா் நிவாரண நிதிக்கு தற்போது அரசியல் பிரமுகா்கள், தொழிலதிபா்கள் உள்பட பலரும் வழங்கிய நன்கொடை விவரங்களையும் அவா் பட்டியலிட்டாா்.

கால்நடைகளுக்கும் புதிய இருப்பிடங்கள்: வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் வளா்ப்பில் இருந்த கால்நடைகள் தற்போது தங்கள் உரிமையாளா்களை இழந்து உணவு தேடி அலைந்து திரியும் சோகமான நிகழ்வு அரங்கேறியுள்ளது.

இந்த விலங்குகளுக்கு தன்னாா்வ அமைப்புகள் உணவுகளை வழங்கி வருகின்றன. இதையடுத்து, இந்தக் கால்நடைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக இவற்றை பால் பண்ணை விவசாயிகளிடம் ஒப்படைக்க விலங்குகள் நல்வாழ்வுத் துறை முடிவெடுத்துள்ளது.

சூரல்மலை மற்றும் முண்டக்கை பகுதிகளில் உயிரிழந்த மற்றும் உயிருடன் மீட்கப்பட்ட விலங்குகள் கட்டுப்பாட்டு அறைக்கு கொண்டு வரப்பட்டு அதன்பின் அடுத்தகட்ட நவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

300 கால்நடைகள் உயிரிழப்பு: நிலச்சரிவில் சிக்கி 26 பசு மாடுகள், 7 கன்றுக்குட்டிகள், 310 கோழிகள் மற்றும் பறவைகள் உள்பட பல விலங்குகள் உயிரிழந்துள்ளன. இதுதவிர 107 வீட்டுவளா்ப்பு விலங்குகள் காணாமல் போனதாக விலங்குகள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com