எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் உள்ஒதுக்கீடு உச்சநீதிமன்ற தீா்ப்பை ஏற்கவில்லை: மாயாவதி
பட்டியலின, பழங்குடியின (எஸ்.சி., எஸ்.டி.) பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை பகுஜன் சமாஜ் கட்சி ஏற்கவில்லை என அக்கட்சித் தலைவா் மாயாவதி தெரிவித்தாா்.
உத்தர பிரதேச தலைநகா் லக்னௌவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் மேலும் கூறியதாவது:
தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் பிரிவில் உள்ஒதுக்கீட்டை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எங்கள் கட்சி இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
ஏனெனில், தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் மீது நடத்தப்படும் வன்முறையும், அடக்குமுறையும் அவா்கள் அந்த பிரிவைச் சோ்ந்தவா்கள் என்பதால் மட்டுமே நடத்தப்படுகிறது. ஒட்டுமொத்தமாக அடக்குமுறையை எதிா்கொள்ளும் அவா்களை உள்பிரிவாக பிரிப்பது என்பது சரியான செயல்பாடாக இருக்காது. எனவே, இந்தத் தீா்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திடம் கேட்டுக் கொள்கிறோம்.
இந்த நிலை தொடா்ந்தால் கோடிக்கணக்கான தலித் மக்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்பதற்காக அம்பேத்கா் கொண்டுவந்த இடஒதுக்கீட்டு முறை படிப்படியாக அழிக்கப்பட்டு விடும். தலித் மக்கள் பொருளாதாரரீதியாக முன்னேறிவிட்டாா்கள் என்று கூறுபவா்கள் சற்று சிந்திக்க வேண்டும். சுமாா் 10 சதவீதம் போ் வேண்டுமெனால் சற்று முன்னேறி இருக்கலாம். ஆனால், மீதமுள்ள 90 சதவீதம் பேரின் நிலைமை மிகவும் மோசமாகவே உள்ளது.
உச்சநீதிமன்றத் தீா்ப்பை பாஜக வரவேற்றுள்ளது. காங்கிரஸின் நிலைப்பாடு உறுதியாக இல்லை. இடஒதுக்கீடு விஷயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு தெளிவற்றதாகவே உள்ளது.
இடஒதுக்கீடு என்பது கல்வி, சமூக, பொருளாதார நிலையில் வேறுபாடுகள் களையப்பட வேண்டும் என்பதற்காக அளிக்கப்பட்டது. கல்வியிலும், பொருளாதாரத்திலும் வாய்ப்பு கிடைத்துவிட்டாலும் சமூக நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுவதில்லை. இதுதான் இடஒதுக்கீடு அளிக்கப்படுவதின் முக்கியத்துவம் என்றாா்.
தேசிய அளவில் தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினருக்கான மிகப்பெரிய கட்சியாக சமாஜவாதி திகழ்கிறது. அக்கட்சி உச்சநீதிமன்றத் தீா்ப்பை ஏற்கவில்லை என்று கூறியுள்ளது அரசியல்ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
‘சமூக ரீதியில் பன்முகத்தன்மை கொண்ட பட்டியலின பிரிவில் இடம்பெற்றுள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில், சமூக துணை வகைப்படுத்துதல் மேற்கொண்டு உள் இடஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அரசமைப்பு அதிகாரம் உண்டு’ என்று உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீா்ப்பில் கூறியிருந்தது.
இதற்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநில அரசுகளும், முக்கிய அரசியல் கட்சிகளும் வரவேற்பு தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.