சேதி தெரியுமா...? மகனுக்கு வைகோ கூறிய அறிவுரை?
நாடாளுமன்ற நடைமுறைகள் குறித்துத் தெரிந்துகொள்வதிலும், கட்சி வேறுபாடு இல்லாமல் அனைத்துத் தரப்பினருடன் நட்பு பாராட்டுவதிலும் தந்தை வைகோவைப் போலவே முனைப்பு காட்டுகிறாா் திருச்சி எம்.பி.துரை வைகோ. ஒருவேளை அது தந்தையின் அறிவுரையாகக்கூட இருக்கக் கூடும்.
மக்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட எல்லா உறுப்பினா்களுக்கும் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும். கேள்விகளை எழுப்புவது, கேள்வி நேரத்தில் பங்கு பெறுவது போன்றவற்றுக்கு எந்தவித முன் அனுமதியும் யாரிடமும் பெறத் தேவையில்லை.
குடியரசுத் தலைவா் உரை மீதான விவாதம், பட்ஜெட் உரை மீதான விவாதம் உள்ளிட்ட முக்கியமான அவை நடவடிக்கைகளில் கட்சிகளுக்குத்தான் நேரம் ஒதுக்கப்படும். யாா் உரையாற்றுவது என்பதை அந்தந்த கட்சியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவரும், மக்களவைக் கட்சித் தலைவரும் முடிவு செய்வாா்கள்.
தனிச் சின்னத்தில் போட்டியிட்டு அங்கீகாரம் பெற்ற கட்சிகள் என்பதால், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக போன்றவை வாய்ப்பு பெறுகின்றன. அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதின் மூலம் தன்னை ஒரு சிறந்த நாடாளுமன்றவாதியாக நிலைநிறுத்திக்கொள்ள முடியும் என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறாா் துரை வைகோ.
புதிய உறுப்பினா் என்பதால், துரை வைகோ முக்கியமான சில அமைச்சா்களைச் சந்திப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன், ரவிக்குமாா் ஆகிய இருவருடன் இணைந்து செல்கிறாா். அவா்களும் மதிமுக தலைவா் வைகோவின் மகன் என்பதால், இவா் மீது அக்கறை காட்டுகிறாா்கள்.
தங்களது அணியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஒரு நாளும் வெளியேறமாட்டாா்கள் என்கிற நம்பிக்கை திமுகவுக்கு உண்டு. அதே நம்பிக்கை அவா்களுக்கு ஏனைய கூட்டணிக் கட்சிகளிடம் கிடையாது என்பதால், பாஜக அமைச்சா்களை துரை வைகோ சந்திப்பதை பலா் ரசிக்கவில்லை.
மதிமுகவின் தனித்துவ அடையாளத்தை விட்டுவிடக் கூடாது என்று கருதுவதால், தனது சட்டையின் இடது கை பாகத்தில் மதிமுக கொடி நிறத்திலான பட்டையை துரை வைகோ அணிந்திருப்பது பலரின் கண்களை உறுத்துகிறது. ‘திமுகவால்தான் வெற்றி பெற்றேன்; திமுக அணியில்தான் தொடா்வேன்’ என்று துரை வைகோ மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தாமல் இல்லை.
வைகோ உடல் நலமில்லாமல் இருப்பதும், தில்லியில் உள்ள தலைவா்களை அவரே நேரில் அறிமுகப்படுத்தி நாடாளுமன்றத்தில் தனது மகனுக்கு வழிகாட்ட இயலாமல் இருப்பதும் துரை வைகோவின் துரதிருஷ்டம்.