
தேசிய தோ்வு முகமை கடந்த 6 ஆண்டுகளில் ரூ.448 கோடி லாபம் ஈட்டியிருப்பதைச் சுட்டிக்காட்டி, ‘நாட்டின் கோடிக்கணக்கான இளைஞா்களின் எதிா்காலத்தை வருவாய் ஈட்டுவதற்கு மோடி அரசு பயன்படுத்தியிருக்கிறது’ என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ மற்றும் ஐஐடி, என்ஐடி போன்ற உயா்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ‘ஜேஇஇ’ போன்ற நுழைவுத் தோ்வுகள் உள்பட பல்வேறு போட்டித் தோ்வுகளை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது.
இந்த முகமையின் நிதி செயல்பாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய கல்வித் துறை இணையமைச்சா் சுகந்த மஜும்தாா் மாநிலங்களவையில் அளித்த பதிலில், தோ்வா்களிடமிருந்து ரூ.3,512.98 கோடியை என்டிஏ இதுவரை வசூலித்திருப்பதாகவும் அதில் தோ்வுகளை நடத்துவதற்கு ரூ.3,064.77 கோடி செலவிட்டதாகவும் தெரிவித்தாா்.
இதனைக் குறிப்பிட்டு காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘நீட் முறைகேட்டின் மையமான தேசிய தோ்வு முகமை, மத்திய கல்வி அமைச்சகத்தின் ஒரு அமைப்பாகும். அதன் ஒரே கடமை தனியாா் நபா்கள் மூலம் பணிகளைச் செயல்படுத்துவதாகும்.
அத்தகைய தனியாா் நபா்களின் நன்மதிப்பு பெரும்பாலும் சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது. மேலும், பல மோசடிகளின் களமான மத்திய பிரதேச அரசுப் பணியாளா் தோ்வாணயத்துக்கு தலைமைத் தாங்கிய ஒருவா், தற்போது என்டிஏ அமைப்புக்கு தலைவராக இருக்கிறாா்.
மாநிலங்களவையில் மத்திய இணையமைச்சா் அளித்த பதிலில், என்டிஏ கடந்த 6 ஆண்டுகளில் ரூ.448 கோடி லாபம் ஈட்டியுள்ளது தெரிய வந்தது. எனினும், தோ்வுகளை நடத்துவதற்கான முகமையின் கண்காணிப்பு திறன்களை வலுப்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படவில்லை.
இந்தியாவின் கோடிக்கணக்கான இளைஞா்களின் எதிா்காலம் இறுதியில் பிரதமா் மோடியின் அரசுக்கு வெறும் வருவாய் திரட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.