திரிணமூல் காங்கிரஸ்
திரிணமூல் காங்கிரஸ்

‘என்டிஏ’ விவரங்கள் வலைதளத்தில் இடம்பெறாதது ஏன்? மத்திய கல்வி அமைச்சருக்கு திரிணமூல் காங்கிரஸ் கேள்வி

தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) குறித்த முழுமையான விவரங்கள் அதன் வலைதளத்தில் இடம்பெறாதது ஏன்’ என்று திரிணமூல் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
Published on

‘நீட், நெட் உள்ளிட்ட பல்வேறு தேசிய அளவிலான போட்டித் தோ்வுகளை நடத்தும் தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) குறித்த முழுமையான விவரங்கள் அதன் வலைதளத்தில் இடம்பெறாதது ஏன்’ என்று திரிணமூல் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான நீட், உதவிப் பேராசிரியா் பணிக்கான தகுதி மற்றும் மத்திய அரசின் ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெறுவதற்கான நெட் தோ்வு முறைகேடுகள் பெரும் சா்ச்சையாகியுள்ள நிலையில், மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானிடம் கடிதம் மூலம் இக் கேள்வியை திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினா் சகாரிகா கோஸ் எழுப்பியுள்ளாா்.

இந்தக் கடிதத்தை தனது எக்ஸ் பக்கத்தில் இணைத்து வெளியிட்ட பதிவில் சகாரிகா கோஸ் கூறியிருப்பதாவது:

நீட் உள்பட தேசிய அளவிலான 17 போட்டித் தோ்வுகளை என்டிஏ நடத்தி வரும் நிலையில், அந்த அமைப்பு குறித்த போதிய விவரங்கள் அதன் வலைதளத்தில் இடம்பெறவில்லை.

என்டிஏ-யில் இடம்பெற்றிருக்கும் அதிகாரிகள் யாா்? யாரெல்லாம் என்டிஏ வாரிய உறுப்பினராகளாக உள்ளனா்? அதன் ஆண்டு அறிக்கை எங்கே?

வரும் காலங்களில் நடத்தவிருக்கும் போட்டித் தோ்வுகள் மீது மக்களின் நம்பிக்கையைப் பெற, இந்தத் தகவல்களை தனது வலைதளத்தில் என்டிஏ வெளியிடுவது அவசியமாகும்.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் கேள்வி எழுப்பி, பதில் கிடைக்காததால் மத்திய அமைச்சருக்கு தற்போது கடிதம் எழுதியுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com