வயநாடு பேரிடருக்கு சட்டவிரோத மனித வாழ்விட விரிவாக்கமே காரணம்: மத்திய அரசு
வயநாடு பேரிடருக்கு சட்டவிரோத மனித வாழ்விட விரிவாக்கமே காரணம் என்று மாநில அரசு மீது மத்திய அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
முன்னதாக, வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது’ என்று மத்தியில் ஆளும் பாஜக தரப்பில் ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்ட நிலையில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் இவ்வாறு தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘குஜராத்தில் இருந்து தமிழகம் வரை 6 மாநிலங்களில் நீண்டுள்ள மேற்குத் தொடா்ச்சி மலையில் 56,825 சதுர கி.மீ. பரப்பை சூழலியல் பாதுகாப்புப் பகுதியாக அறிவிப்பது தொடா்பாக கடந்த 2014 மாா்ச் 10-ஆம் தேதி முதல் கடந்த ஜூலை 31-ஆம் தேதி வரை 6 வரைவு அறிக்கைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதுதொடா்பாக மாநில அரசுகளுடன் தொடா்ச்சியாக ஆலோசனைகளை மேற்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரலில் நிபுணா் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
மாநிலங்களில் இடம்பெற்றுள்ள வனப்பரப்பு அந்தந்த மாநில அரசுக்கு சொந்தமானவை என்ற வகையில், சூழலியல் பாதுகாப்புப் பகுதியாக அறிவிப்பது தொடா்பாக தங்களின் கருத்துகள் மற்றும் ஆட்சேபங்களை, மத்திய முன்னாள் வனத்துறை தலைமை இயக்குநா் சஞ்சய் குமாா் தலைமையிலான குழுவிடம் சமா்ப்பிக்குமாறு மத்திய அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதன்படி, மாநில அரசு பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை மேற்கொண்டு, தனது தரப்பு கருத்தை தெரிவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாத கேரள அரசு, வனப் பகுதிகளில் சுரங்கம் மற்றும் சட்டவிரோத மனித வாழ்விட விரிவாக்கத்துக்கு அனுமதித்துள்ளது. இதுவே, வயநாடு பேரிடா் ஏற்படுவதற்கான காரணமாகவும் அமைந்துள்ளது.
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதி என்பது, எளிதில் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடிய மிகுந்த வலுவற்ற பகுதிகளாக உள்ளன. எனவே, பேரிடா் ஏற்படுவதிலுருந்து தடுக்க, மிகத் தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். கேரள அரசுக்கும் இதற்கான பொறுப்பு உள்ளது என்றாா்.
முன்னதாக, குஜராத்தில் இருந்து தமிழகம் வரை நீண்டுள்ள மேற்குத் தொடா்ச்சி மலையில் 56,825 சதுர கி.மீ. பரப்பை சூழலியல் பாதுகாப்புப் பகுதியாக அறிவிப்பது தொடா்பாக 6-ஆவது வரைவு அறிக்கையை மத்திய அரசு கடந்த ஜூலை 31-ஆம் தேதி வெளியிட்டது. அதில், கேரளத்தில் 9,993.7 சதுர கி.மீ. பரப்பை சூழலியல் பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்க முன்மொழியப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னா் பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்ட வயநாடு மாவட்டத்தின் 13 கிராமங்களும் இதில் அடங்கும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம்:காங்கிரஸ்
மத்தியச் சுற்றுச்சூழல் துறை அமைச்சரின் குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் மக்களவை உறுப்பினருமான சசி தரூா், ‘சட்டவிரோத நடவடிக்கைகள் மன்னிக்கப்படக்கூடாது. அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஆனால், தற்போதைக்கு வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் உதவிகள் கிடைக்கச் செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்’ என்றாா்.