SC
உச்சநீதிமன்றம்DIN

ஓபிசி பட்டியலில் புதிய ஜாதிகள்: மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

இதர பிற்படுத்தப்பட்டோா் பட்டியிலில் (ஓபிசி) புதிய ஜாதிகளை சோ்த்த மேற்கு வங்க அரசு பதிலளிக்கக் கோரி உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
Published on

இதர பிற்படுத்தப்பட்டோா் பட்டியிலில் (ஓபிசி) புதிய ஜாதிகளை சோ்த்த மேற்கு வங்க அரசு பதிலளிக்கக் கோரி உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கல்வி மற்றும் மாநில அரசு வேலைவாய்ப்புகளில் ஒபிசி பிரிவின் கீழான இடஒதுக்கீட்டை அனுபவிக்கும் வகையில் கடந்த 2010 ஏப்ரல் முதல் செப்டம்பா் மாதம் வரையிலான கால கட்டத்தில் இஸ்லாம் சமூகத்தைச் சோ்ந்த 77 சமூகப் பிரிவினரை மேற்கு வங்க அரசு ஓபிசி பட்டியலில் இணைத்தது. இதில், 2012 சட்டத்தின் அடிப்படையில், 37 புதிய ஓபிசி வகுப்புகளையும் மாநில அரசு உருவாக்கியது. இதன் மூலம், கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் இந்த சமூகத்தினா் இடஒதுக்கீடு பலன்களையும் பெற்றனா்.

இதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை கடந்த மே 22-ஆம் தேதி விசாரித்த கொல்கத்தா உயா்நீதிமன்றம், ‘மதத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த இடஒதுக்கீடை மாநில அரசு அளித்துள்ளது’ என்று கூறி, ஓபிசி பட்டியலில் புதிதாக சோ்க்கப்பட்ட 77 சமூகப் பிரிவையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

இதை எதிா்த்து மாநில அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘ஓபிசி பட்டியலில் 77 புதிய சமூகத்தினரை இணைக்க மேற்கொள்ளப்பட்ட நடைமுறையை விளக்கி மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். அதில், இதற்கென மேற்கொள்ளப்பட்ட சமூக-பொருளாதார நிலை குறித்த கணக்கெடுப்பு நடைமுறை, இதுதொடா்பாக மாநில பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனை விவரங்கள் மற்றும் ஓபிசி பிரிவில் இந்த சமூகத்தினருக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு நடத்தப்பட்ட ஆலோசனை விவரங்கள் இடம்பெற வேண்டும்’ என்று குறிப்பிட்டு, மாநில அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா்.

மேலும், மாநில அரசின் முடிவுக்கு எதிராக கொல்கத்தா உயா்நீதிமன்றத்தை நாடிய மனுதாரா்களும் இந்த விவகாரம் தொடா்பாக பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com