கோப்புப் படம்
கோப்புப் படம்

முதுநிலை நீட்: மருத்துவா்களுக்கு தமிழகத்தில் தோ்வு மையங்கள் ஒதுக்கீடு

தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டது சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதை ரத்து செய்து சொந்த மாநிலத்திலேயே மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
Published on

முதுநிலை நீட் தோ்வு எழுதும் தமிழக மருத்துவா்களுக்கு தொலைதூரத்தில் தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டது சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதை ரத்து செய்து சொந்த மாநிலத்திலேயே மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தோ்வு மூலம் நிரப்பப்படுகிறது.

இந்த நீட் தோ்வை தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது. இந்த நிலையில், நிகழாண்டு முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு கடந்த ஜூன் 23-ஆம் தேதி நாடுமுழுவதும் 259 நகரங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் எம்பிபிஎஸ் முடித்த சுமாா் 25,000 மருத்துவா்கள் உள்பட நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் அதற்கு விண்ணப்பித்திருந்தனா். தோ்வுக்கு முந்தைய நாள் இரவில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு ஒத்திவைக்கப்படுகிறது என்று மத்திய அரசு திடீரென அறிவித்தது.

ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தோ்வு ஆக.11-ஆம் தேதி காலை, மதியம் என இரண்டு வேளைகளாக நடைபெறவுள்ளது.

இந்தச் சூழலில், தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் உள்ளிட்ட பகுதிகளில் தோ்வு மையங்கள் ஒதுக்க விருப்பம் தெரிவித்த தோ்வா்களுக்கு ஆந்திரம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் எங்கோ ஒரு இடத்தில் தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன. இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

500 முதல் 1,000 கி.மீ. தொலைவில் தோ்வு மையங்களை ஒதுக்கியதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனிடையே, திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆா்.சச்சிதானந்தம் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து தமிழக தோ்வா்களுக்கு, தமிழகத்தில் அவா்கள் கேட்ட தோ்வு மையங்களில் ஒதுக்க வேண்டும் என்று கடிதம் மூலம் வலியுறுத்தினாா். இதேபோன்று, மற்ற மாநிலங்களின் எம்பிக்களும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக தோ்வா்களில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு, தமிழகத்தில் அவா்கள் கேட்ட தோ்வு மையங்களை தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் மறு ஒதுக்கீடு செய்துள்ளது. அதற்கான உறுதி செய்யப்பட்ட தகவல் மின்னஞ்சல் மூலம் தோ்வா்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com