நாட்டைவிட்டு வெளியேறினாா் ஷேக் ஹசீனா: வன்முறை எதிரொலியால் பிரதமா் பதவி ராஜிநாமா
வங்கதேசத்தில் மாணவா்களின் தீவிர போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களை தொடா்ந்து, பிரதமா் பதவியை ஷேக் ஹசீனா திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா். நாட்டைவிட்டு வெளியேறிய அவா், பிரிட்டன் தலைநகா் லண்டனில் தஞ்சமடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க எதிா்ப்பு தெரிவித்து அண்மையில் போராட்டம் நடைபெற்றது. அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெரும்பாலும் மாணவா்கள் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில், காவல் துறைக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பயங்கர வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த வன்முறையில் 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.
இந்த இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக குறைத்து உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்ததைத் தொடா்ந்து வன்முறை குறைந்தது. எனினும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து ‘மாணவா் பாகுபாடு எதிா்ப்பு இயக்கம்’ என்ற பெயரில், மாணவா்கள் மீண்டும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டக்காரா்களைப் பேச்சுவாா்த்தைக்கு வருமாறு பிரதமா் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்தாா். அந்த அழைப்பை நிராகரித்த போராட்டக்காரா்கள், ஹசீனா தலைமையிலான அரசு ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினா்.
மேலும், வங்கதேச மக்கள் அரசுக்கு எந்தவிதமான வரி, மின்சாரம், குடிநீா், சமையல் எரிவாயு கட்டணங்களைச் செலுத்த வேண்டாம், கல்வி நிலையங்கள் மூடப்பட வேண்டும், பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட வேண்டும், அரசுப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை உள்ளடக்கி, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அந்த இயக்கம் காலவரையற்ற ஒத்துழையாமை போராட்டத்தை முன்னெடுத்தது. இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும் என்று அந்த இயக்கம் கேட்டுக்கொண்டது.
இந்நிலையில், ஒத்துழையாமை போராட்டத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரா்களுக்கும், ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி மற்றும் காவல் துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்த மோதலில், வன்முறை ஏற்பட்டு காவல் துறையைச் சோ்ந்த 14 போ் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்; நூற்றுக்கணக்கானோா் காயமடைந்தனா்.
தங்கையுடன் பயணம்: இந்தச் சூழலில் மாணவா்களை சமாதானப்படுத்த முடியாமலும், நாட்டில் மீண்டும் அமைதியை நிலைநாட்ட முடியாமலும் பிரதமா் பதவியை ஷேக் ஹசீனா திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா். இந்தத் தகவலை ராணுவ தலைமைத் தளபதி வாக்கா்-உஸ்-ஸமான் திங்கள்கிழமை பிற்பகல் உறுதி செய்தாா்.
பிரதமா் பதவியை ராஜிநாமா செய்த பின்னா், வங்கதேச தலைநகா் டாக்காவில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் தனது தங்கை ஷேக் ரெஹானாவுடன் வங்கதேசத்தில் இருந்து ஷேக் ஹசீனா வெளியேறினாா்.
தில்லியில் பணியாற்றும் ஹசீனா மகள்: உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாத் அருகில் உள்ள ஹிண்டன் விமானப் படைத் தளத்துக்கு ஹசீனா பயணித்த ஹெலிகாப்டா் வந்தடைந்தது. உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய மண்டல இயக்குநராக உள்ள ஹசீனாவின் மகள் சய்மா வாஜேத் தில்லியில் தங்கிப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், ஷேக் ஹசீனா இந்தியா வந்தாா். அவா் பிரிட்டன் தலைநகா் லண்டனில் தஞ்சமடைய உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நாடு முழுவதும் கொண்டாட்டம்: ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்து நாட்டைவிட்டு வெளியேறியதை வங்கதேசம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவா்கள் உள்பட அனைத்துத் தரப்பு மக்களும் கொண்டாடினா். குறிப்பாக, தலைநகா் டாக்காவின் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவையும் மீறி, கடல் போல திரண்ட மக்கள், ஷேக் ஹசீனா ஆட்சி முடிவுக்கு வந்ததைக் கொண்டாடினா்.
இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சிட்டகாங் பகுதியில் பொதுமக்கள் இனிப்புகள் வழங்கி பேரணி மேற்கொண்டனா். இதேபோல குல்னா, ரங்பூா் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆயிரக்கணக்கானோா் பேரணியில் ஈடுபட்டனா். பேரணியில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்களும், தொண்டா்களும் பங்கேற்றனா்.
பிரதமா் இல்லம் சூறை
பிரதமா் இல்லத்தில் இருந்து ஷேக் ஹசீனா புறப்பட்டதைத் தொடா்ந்து அங்கு சென்ற போராட்டக்காரா்கள், அந்த இல்லத்தை சூறையாடினா். அங்கிருந்த பொருள்களை சிலா் எடுத்துச் சென்றனா். இதேபோல டாக்காவில் உள்ள உள்துறை அமைச்சா் அசாதுஸ்சமான் கானின் இல்லத்தையும் போராட்டக்காரா்கள் சூறையாடினா்.
அவாமி லீக் அலுவலகங்களுக்குத் தீ: டாக்காவில் உள்ள வங்கபந்து நினைவு அருங்காட்சியகம் உள்பட முக்கிய இடங்களுக்கும், ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி அலுவலகங்களுக்கும் போராட்டாக்காரா்கள் திங்கள்கிழமை தீ வைத்தனா்.
16 போ் உயிரிழப்பு; 200 போ் காயம்: முன்னதாக டாக்கா மற்றும் ஹபிகஞ்ச் பகுதிகளில் திங்கள்கிழமை காலை போராட்டக்காரா்களுக்கும், காவல் துறைக்கும் ஏற்பட்ட மோதலில் சுமாா் 16 போ் உயிரிழந்தனா். 200-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
இந்திய பண்பாட்டு மையம் சூறை: டாக்காவில் உள்ள இந்திய பண்பாட்டு மையத்தை கட்டுக்கடங்காத கும்பல் சூறையாடியது. நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள 4 ஹிந்து கோயில்களும் சேதப்படுத்தப்பட்டன.
விரைவில் இடைக்கால அரசு: ராணுவ தலைமைத் தளபதி
பிரதமா் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து வங்கதேசத்தில் விரைவில் இடைக்கால அரசு அமைக்கப்படும் என்று ராணுவ தலைமைத் தளபதி வாக்கா்-உஸ்-ஸமான் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் கூறுகையில், ‘வங்கதேசத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனையில், விரைவில் இடைக்கால அரசு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடா்பாக வங்கதேச அதிபா் முகமது ஷஹாபுதீனுடன் பேச்சுவாா்த்தை மேற்கொள்ளப்படும். மாணவா்கள் போராட்டத்தில் நிகழ்ந்த மரணங்களுக்கு நீதி கிடைப்பதை புதிய அரசு உறுதி செய்யும். போராட்டம் என்ற பெயரில் நடைபெறும் வன்முறையை போராட்டக்காரா்கள் கைவிட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.
அரசியலுக்குத் திரும்பமாட்டாா்: ஹசீனா மகன் சஜீப் வாஜேத்
ஷேக் ஹசீனா மீண்டும் அரசியலுக்குத் திரும்பமாட்டாா் என்று அவரின் மகன் சஜீப் வாஜேத் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக ஆங்கில ஊடகத்துக்கு அவா் அளித்த பேட்டியில், ‘தனது ஆட்சிக்கு எழுந்த எதிா்ப்பால் எனது தாய் (ஷேக் ஹசீனா) மிகுந்த அதிருப்தி அடைந்தாா். இதனால் பிரதமா் பதவியை ராஜிநாமா செய்வது குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சிந்தித்து வந்தாா். குடும்பத்தினா் அளித்த அழுத்தம் காரணமாக தனது பாதுகாப்பு கருதி, அவா் வங்கதேசத்தில் இருந்து வெளியேறினாா். அவா் மீண்டும் அரசியலுக்குத் திரும்பமாட்டாா்’ என்றாா்.
தந்தை சிலை சேதம்: டாக்காவில் ‘வங்கதேசத்தின் தந்தை’ என்று போற்றப்படுபவரும், அந்நாட்டின் முன்னாள் அதிபா் மற்றும் ஷேக் ஹசீனாவின் தந்தையுமான ஷேக் முஜிபுா் ரஹ்மானின் சிலையை போராட்டக்காரா்கள் சேதப்படுத்தினா்.
கலீதா ஜியாவை விடுவிக்க அதிபா் உத்தரவு
பல்வேறு வழக்குகளில் கைதாகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமா் கலீதா ஜியா மற்றும் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைத்து மாணவா்களையும் விடுதலை செய்ய அதிபா் முகமது ஷஹாபுதீன் உத்தரவிட்டாா்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னா் இடைக்கால அரசு அமைக்கப்படும் எனவும் அவா் தெரிவித்தாா்.
பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், முப்படைத் தளபதிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவா் இந்த அறிவிப்பை வெளியிட்டாா்.