
வங்கதேசத்தில் அரசுக்கு எதிராக வெடித்த பெரும் போராட்டங்களால் பிரதமா் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா(76), லண்டனில் தஞ்சமடையும் திட்டத்தின் ஒரு பகுதியாக தனது சகோதரி ஷேக் ரெஹானாவுடன் நாட்டைவிட்டு வெளியேறி அந்நாட்டின் ராணுவ ஹெலிகாப்டா் மூலம் தில்லி அருகே உள்ள காஜியாபாதில் உள்ள ஹிண்டன் விமான தளத்துக்கு நேற்று(ஆக. 5) வந்தாா்.
இந்தியாவுக்கு வந்தடைந்த அவரை பாதுகாப்புத் துறையின் ஆலோசகர் அஜீத் தோவல் சந்தித்துப் பேசியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இச்சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்ற விவரம் அதிகாரபூா்வமாக வெளியிடப்படவில்லை.
லண்டனில் தஞ்சமடையும் திட்டத்தில் சில சிக்கல்கள் எழுந்ததால், இந்தியாவில் இருந்து ஷேக் ஹசீனா உடனடியாக புறப்படவில்லை என்றும், பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஷேக் ஹசீனா, லண்டன் செல்லும் வரை இந்தியாவில் இருப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வங்கதேசத்திலிருந்து தில்லிக்குப் பயணித்த வங்கதேச விமானப்படையின் சி-130ஜே ஜெட் விமானம், ஹிண்டன் விமான தளத்திலிருந்து இன்று(ஆக. 6) காலை 9 மணியளவில் அந்நாட்டு ராணுவ வீரர்களுடன் வெளிநாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், அவர் லண்டன் செல்வதற்கான விசா அனுமதி பெறுவதில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து ஷேக் ஹசீனா அந்த விமானத்தில் செல்லவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தை இந்திய பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஹிண்டன் விமான தளத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, வங்கதேசத்தில் நிலவும் வன்முறை குறித்து அனைத்து கட்சி கூட்டம் தில்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.