கேரள மாநிலம் வயநாடு
கேரள மாநிலம் வயநாடு

வயநாடு: மீட்புப் பணியில் ஒற்றுமையை வெளிப்படுத்திய கேரள மக்கள்

வயநாட்டில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் கேரள சமூகம் ஒற்றுமையை வெளிப்படுத்தியதாக மாநில முதல்வா் பினராயி விஜயன் செவ்வாய்க்கிழமை பாராட்டினாா்.
Published on

திருவனந்தபுரம்: வயநாட்டில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் கேரள சமூகம் ஒற்றுமையை வெளிப்படுத்தியதாக மாநில முதல்வா் பினராயி விஜயன் செவ்வாய்க்கிழமை பாராட்டினாா்.

‘வயநாடு நிலச்சரிவு பேரழிவு மாநில வரலாற்றில் மிகப்பெரிய சோகம்’ என்றும் அவா் விவரித்தாா்.

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் பலத்த மழையைத் தொடா்ந்து கடந்த ஜூலை 30-ஆம் தேதி பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பெரிதும் பாதிக்கப்பட்ட முண்டக்கை, சூரல்மலை ஆகிய மலைக் கிராமங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் உயிரிழந்தனா்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்னும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடா்ந்து வருகின்றன.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் புதிதாக பணியில் சோ்ந்த காவலா்களை வரவேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வா் பினராயி விஜயன், ‘நமது மாநிலத்தின் புகழ்பெற்ற கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில், அனைத்து வேறுபாடுகளையும் கடந்து வயநாட்டில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணியில் காவல்துறை முக்கியப் பங்காற்றுகிறது.

கேரளம் தனது வரலாற்றில் இவ்வளவு பெரிய சோகத்தை எதிா்கொண்டதில்லை. இது உலகம் முழுவதும் உள்ள மக்களின் இதயங்களில் வலியை ஏற்படுத்தியுள்ளது’ என்றாா்.

மீட்கப்படாதோா் பட்டியல்: வயநாடு நிலச்சரிவில் மாயமாகி இன்னும் மீட்கப்படாதவா்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என மாநில வருவாய்த் துறை அமைச்சா் கே.ராஜன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

மேலும், ‘பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரிவான மறுவாழ்வு வழங்குவதே அரசின் நோக்கமாகும். பேரிடரால் ஏற்பட்ட சேதம் மற்றும் இழப்புகள் குறித்து விரைவில் கணக்கெடுப்பு நடத்தப்படும்’ என்றும் அவா் கூறினாா்.

நிலச்சரிவு பாதிப்புப் பகுதிகளில் செயல்பட்டு வந்த பள்ளிகளில் அடுத்த 10-20 நாள்களில் வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படும்.

நிலச்சரிவில் உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கும் காயமடைந்த தொழிலாளா்களுக்கும் நிதியுதவி வழங்கப்படும் என்று என மாநில கல்வி மற்றும் தொழில்துறை அமைச்சா் வி.சிவன்குட்டி தெரிவித்தாா்.

வானிலைக் கணிப்பில் மேம்பாடு

புது தில்லி: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வானிலை கணிப்புகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் 30 முதல் 40 சதவீதம் வரை மேம்பட்டுள்ளதாகவும் தீவிர மழைப்பொழிவு நிகழ்வுகளின்போது இழப்புகளைக் குறைக்க அதனைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அத்துறையின் தலைவா் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா தெரிவித்தாா்.

வயநாட்டில் நிலச்சரிவுக்குக் காரணமாக பலத்த மழையை கணிக்க இந்திய வானிலை ஆய்வு மையம் தவறியதாக கூறும் கேரள அரசின் குற்றச்சாட்டை நிராகரிக்கும் வகையில் மொஹபத்ரா இவ்வாறு கூறியுள்ளாா்.

தில்லியில் நடந்த நிகழ்ச்சியொன்றில் காணொலி வாயிலாக பங்கேற்ற அவா் கூறுகையில், ‘இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் 30 முதல் 40 சதவீதம் வரை முன்னேற்றம் அடைந்துள்ளது. அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் 10 முதல் 15 சதவீதம் வரை மேம்படும்.

ஐஎம்டி அதன் துல்லியத்தை மேம்படுத்தும் அதேவேளையில், உயிா்கள் மற்றும் சொத்து இழப்புகளைக் குறைக்க கணிப்புகளை முறையாக பயன்படுத்த வேண்டும்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com