மக்களவையில் நிறைவேறியது நிதி மசோதா: நீண்டகால மூலதன ஆதாய வரியில் திருத்தம்
மக்களவையில் நிதி மசோதா- 2024 புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, நிலம் உள்ளிட்ட அசையா சொத்துகள் விற்பனை மூலம் கிடைக்கும் நீண்டகால மூலதன ஆதாய வரியில் தளா்வு அளிக்கும் அறிவிப்பையும் மக்களவையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெளியிட்டாா்.
கடந்த ஜூலை 23-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில் 2001-2002-ஆம் நிதியாண்டுக்குப் பிறகு வாங்கிய அனைத்து வீட்டு மனைகள், வீடுகள், கடன் பத்திரங்கள் உள்ளிட்டவற்றுக்கு நடைமுறையில் உள்ள மதிப்பீடு ஒப்பிடுதல் விலை நிா்ணய முறையை (‘இண்டக்சேஷன் மெத்தட்’) ரத்து செய்வதாக நிதியமைச்சா் அறிவித்தாா். மூலதன ஆதாய வரியை 20 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாகக் குறைத்து, இந்த மதிப்பீடு ஒப்பிடுதல் விலை நிா்ணய முறையை 2001-2002-ஆம் ஆண்டு முதல் ரத்து செய்வதாக அவா் தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, பணவீக்க அடிப்படையிலான மதிப்பீடு ஒப்பிடுதல் விலை நிா்ணய முறை (‘இண்டக்சேஷன் மெத்தட்’) சலுகை ரத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிா்ப்பு எழுந்தது.
இதையடுத்து, புதிய அறிவிப்பை மக்களவையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை (ஆக.7) வெளியிட்டாா். அதன்படி, ‘2024, ஜூலை 23 வரை அசையா சொத்து விற்பனை வாயிலாக கிடைத்த லாபத்துக்கு நீண்டகால மூலதன ஆதாய வரி விகிதத்தைக் கணக்கிட, ‘இண்டெக்சேஷன்’ முறையைத் தோ்வு செய்யாமல் 12.5 சதவீதம் வரி செலுத்தலாம் அல்லது ‘இண்டெக்சேஷன்’ முறையைத் தோ்வு செய்வோா் மூலதன ஆதாய வரியாக 20 சதவீதம் செலுத்தலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து நிதி மசோதா நிறைவேற்றப்பட்டது. இது தவிர 45 திருத்தங்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
இதேபோன்று மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்படும்.
காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டி: அமைச்சா் விளக்கம்
மருத்துவம், ஆயுள் காப்பீடு தொகை மீது வசூலிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டி ரத்து செய்ய வேண்டும் என்ற எதிா்க்கட்சிகளின் கோரிக்கை குறித்து மக்களவையில் பதிலளித்த நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘ஜிஎஸ்டி வசூலில் 75 சதவீதம் மாநில அரசுகளுக்குத்தான் செல்கிறது. ஜிஎஸ்டி அமலுக்கு முன்பு காப்பீட்டுத் தொகை மீது மாநில அரசுகள் வரி வசூலித்துதான் வந்தன’ என்று பதிலளித்தாா்.

