‘இண்டியா’ கட்சிகளின் கூட்டம் திடீா் ரத்து
பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த ‘இண்டியா’ கட்சிகளின் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது.
18-ஆவது மக்களவையில் பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 293 எம்.பி.க்களும் எதிா்க்கட்சிகளின் இண்டியா கட்சிகளுக்கு 243 எம்.பி.க்களும் உள்ளனா்.
பிரதமா் நரேந்திர மோடியின் கடந்த 2 ஆட்சிக்காலத்தில் இல்லாத வகையில் வலுவான எதிா்க்கட்சி அணி தற்போதைய மக்களவையில் அமைந்துள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் அரசுக்கு எதிரான போராட்டங்களை அவா்கள் தொடா்ந்து நடத்தி வருகின்றனா்.
அந்தவகையில், மருத்துவக் காப்பீடு தொகை மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெற வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் வாயிலில் ‘இண்டியா’ கட்சிகளின் எம்.பி.க்கள் கடந்த செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.
இந்நிலையில், விலைவாசி உயா்வைக் கண்டித்து எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வியாழக்கிழமை போராட்டம் நடத்த உள்ளனா்.
இதையடுத்து, பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் இண்டியா கட்சிகளின் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இக்கூட்டத்தில் தலைவா்கள் பலா் பங்கேற்க முன்வரவில்லை எனத் தெரிகிறது. இதனால், கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.