
நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 4 சரக்கு ரயில்கள் தடம் புரண்டன.
மேற்கு வங்கத்தின் குமேத்பூா் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் வெள்ளிக்கிழமை தடம் புரண்டன.
இச்சம்பவம் தொடா்பாக வடக்கு ரயில்வே அதிகாரி சப்யசச்சி கூறியதாவது:
மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் காலை 10:45 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. குமேத்பூா் ரயில் நிலையத்தை கடந்து செல்லும் வழியில் சரக்கு ரயில்கன் 5 பெட்டிகள் தடம் புரண்டன.
பொறியியல் கோளாறு காரணமாக பெட்டிகள் தடம் புரண்டிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது என்றாா்.
பிகாா்: மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரியில் இருந்து பிகாரில் உள்ள கதிஹாருக்கு பெட்ரோல் ஏற்றிச் சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் 5 டேங்கா்கள் வெள்ளிக்கிழமை தடம் புரண்டன.
இந்த விபத்து காரணமாக நியூ ஜல்பைகுரி-மால்டா-கடிஹாா் வழித்தடத்தில் இயக்கப்படும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, திருப்பிவிடப்பட்டு வருகின்றன.
கோவா: மலைப்பாங்கான தெற்கு கோவாவின் சோனாலியம் மற்றும் துத்சாகா் ரயில் நிலையம் இடையே 17 பெட்டிகளுடன் சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் வெள்ளிக்கிழமை காலை 9:35 மணியளவில் தடம் புரண்டது.
இதனால் அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 3 ரயில்கள் திருப்பி விடப்பட்டதுடன், 2 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
பாதையை சீரமைக்க 140 டன் எடையுள்ள கிரேன்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தென்மேற்கு ரயில்வே அதிகாரி மஞ்சுநாத் கனமதி தெரிவித்தாா்.
உ.பி.: உத்தரபிரதேசத்தின் அலிகா் மாவட்டத்தில் சரக்கு ரயிலின் 2 காலி பெட்டிகள் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் தடம் புரண்டன.
ஹா்துவாகஞ்ச் அனல் மின் நிலையத்தில் நிலக்கரியை இறக்கிவிட்டு மெதுவான வேகத்தில் சரக்கு ரயில் திரும்பிக் கொண்டிருந்தபோது, இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.