
வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் தெலங்கானா வக்ஃப் வாரியத்தின் தலைவர்.
புது தில்லியில் ஆக. 8, வியாழக்கிழமை, நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா மத்திய சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், மூத்த தெலங்கானா காங்கிரஸ் தலைவரும் மாநில வக்ஃப் வாரியத்தின் தலைவருமான சையத் அஸ்மத்துல்லா ஹுசைனி, மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மசோதாவை எதிர்த்து ஹுசைனி கூறியதாவது, ``இந்த மசோதா வக்ஃப் வாரிய சொத்துக்களின் மீது புல்டோசரை ஏற்றுவதைப் போலுள்ளது. பாஜகவுக்கு சிறுபான்மை வாக்குகள் எதுவும் கிடைக்காததால், தற்போது பாஜக பழிவாங்கும் அரசியல் செய்கிறது.
பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசக் கட்சியும், ஐக்கிய ஜனதா தளக் கட்சியும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
அவசர வக்ஃப் வாரியக் கூட்டத்திற்கு நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம்; கூட்டத்தில் அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.
எதிர்க்கட்சிகள், இந்த மசோதாவை மத விஷயங்களில் தலையிடுவது என்பது `அரசியலமைப்பு மீதான தாக்குதல்’ என்று கண்டித்தபோதிலும், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.
மக்களவையில் அறிமுகம் செய்த வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவின்படி, வக்ஃப் வாரிய சொத்து குறித்து தீா்மானிக்கும் வாரியத்தின் அதிகாரம் தொடா்பாக தற்போதைய சட்டத்தில் (வக்ஃப் வாரிய சட்டம் 1995) இடம்பெற்றுள்ள பிரிவு 40 நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
அதற்கு மாறாக, மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் மாநில வக்ஃப் வாரிய உறுப்பினா்களும் இடம்பெறும் தொகுப்பு அமைப்பாக மாற்றப்படுவதோடு, முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவா்களும் வக்ஃப் வாரியங்களில் இடம்பெறுவதை மசோதா உறுதி செய்கிறது.
இந்த மசோதாவின்படி, வக்ஃப் வாரிய நிலங்களைக் கட்டாயமாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். வக்ஃப் நிலமா, இல்லையா என்பதை மாவட்ட நிா்வாகம் மற்றும் நீதிமன்றங்கள் முடிவு செய்யும்.
மேலும், போராஸ், அகாகனிஸ் ஆகிய பிரிவுகளுக்கென தனி சொத்து வாரியம் (அக்ஃப்) உருவாக்கப்பட்டு, அதில் ஷியா, சன்னி, போராஸ், அகாகனிஸ் மற்றும் பிற இதர பிற்படுத்த முஸ்லிம் சமூகத்தினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்க மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மத்திய வலைதளம் மற்றும் தரவுத்தளம் மூலமாக வக்ஃப் வாரிய சொத்துகள் பதிவை முறைப்படுத்தி, வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘வக்ஃப் வாரிய சட்டம் 1995’-ஐ ‘ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மேம்பாடு சட்டம் 1995’ என்று பெயா் மாற்றம் செய்யவும் மசோதா பரிந்துரைக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.