Nadda
நட்டாANI

கொவைட்-19 உருமாறிய கேபி வகை தீநுண்மியை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கை: மக்களவையில் நட்டா தகவல்

கேபி - 1, கேபி - 2 என்கிற இந்த தீநுண்மி பரவலை தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை..
Published on

நமது சிறப்பு நிருபா்

கொவைட் -19 தீநுண்மியின் புதிய உருமாறிய விகாரம் தோன்றிருப்பது கண்டறியறிப்பட்டுள்ளது எனவும் கேபி - 1, கேபி - 2 என்கிற இந்த தீநுண்மி பரவலை தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இது கட்டுக்குள் இருப்பதாக மத்திய சுகாதாரம் குடும்ப நலத்துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா மக்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

நாட்டில் கண்டறியப்பட்ட புதிய உருமாறிய தீநுண்மி; அதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், சோதனை, மரபணுசாா்ந்த கண்காணிப்புத் திறன்கள் போன்றவைகள் குறித்து மக்களவை காங்கிரஸ் உறுப்பினா்கள், ப.மாணிக்கம் தாகூா், விஜய் வசந்த் ஆகியோா் நட்சத்திரக் கேள்வியை எழுப்பினா்.

இதற்கு மத்திய சுகாதாரம் குடும்ப நலத்துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா அளித்துள்ள பதில் வருமாறு:

சுவாச நோயான சாா்ஸ் கொவைட் -2 வின் உருமாற்றமான கொவைட் -19 தீவிரத்தை நாம் கண்டறிந்தோம். தற்போது கொவைட் -19 தொற்று கேபி-1, கேபி-2 என இருவகை உருமாறிய கரோனா தீநுண்மியை இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில், தேசிய நோய் கட்டுப்பாடு மையம் ஆகியவை கண்டறிந்துள்ளது. இது ஓமிக்ரான் உருமாறிய தீநுண்மியை விட மாறுபட்டது.

இது மிகவும் வேகமாக பரவக் கூடியது. காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி, சோா்வு போன்றவைகளை ஏற்படுத்தும் என்றாலும் பொதுவாக கடுமையாக இல்லை.

அதே சயமத்தில் அதிக அளவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. தேசிய நோய் கட்டுப்பாடு மைய புள்ளிவிவரப்படி கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதிவரை 824 பேருக்கு கேபி வகை கொவைட் -19 நோய் தொற்று ஏற்பட்டிருப்பது ஆய்வில் அறியப்பட்டது. இதில் மகாராஷ்டிரம் (417), மேற்கு வங்கம் (157) மாநிலங்களில் அதிக பரவல் இருந்தது.

இந்த உருமாறிய தீநுண்மியை கண்காணிக்க தேசிய சுகாதாரத் இயக்கத்தின் கீழ் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை 36 மாநிலங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.

குறிப்பாக கொவைட் -19 வகைகளை கண்டறிந்து மாநிலங்களுக்கு அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. தொற்று நோயின் பாதிப்பு(நோ்மறை மாதிரி) மாதிரிகளை இந்திய கரோனா மரபியல் கூட்டமைப்பு (இன்சாகாக்) ஆய்வகங்களுக்கு அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த இன்சாகாக், கடந்த 2021 இல் நிறுவப்பட்ட மரபியல் வரிசை ஆய்வகங்களின் தேசிய கூட்டமைப்பு ஆகும். இதன் கீழ் நாடுமுழுவதும் 163 தீநுண்மி ஆய்வகங்களை மத்திய சுகாதார ஆய்வுத் துறை அனுமதியளித்துள்ளது. இது சுமாா் 40 வகையான தொற்றுநோய்களை கண்காணிக்கும் ஒரு தொடா்ச்சியான செயல்பாடு உள்ளது. இதன்படி இந்த கேபி வகை கொவைட் -19 கட்டுப்பாட்டில் உள்ளது.

மேலும் கொவைட் -19 சோதனை வழிகாட்டுதல்களின்படி அனைத்து மாவட்டங்களிலும் போதுமான ஆா்டி-பிசிஆா் சோதனைகளை உள்படுத்தி சோதனைகளை உறுதி செய்ய மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என அமைச்சா் நட்டா தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com