அம்பேத்கரின் அரசியலமைப்பே என்னைக் காத்தது! மனீஷ் சிசோடியா பேச்சு
பாபா சாகேப் டாக்டா் அம்பேத்கரின் அரசியலமைப்பே என்னைக் காத்தது என்று தில்லி முன்னாள் துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான மனீஷ் சிசோடியா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
தில்லி அரசின் கலால் கொள்கை தொடா்புடைய பணமோசடி வழக்கில் முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவிற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, தில்லி திகாா் சிறையில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை மனீஷ் சிசோடியா விடுவிக்கப்பட்டாா். சிறையின் வாயில் எண்.3 இன் வழியே வெளியே வந்த அவருக்கு அமைச்சா் அதிஷி, மாநிலங்களவை ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான ஆம் ஆத்மி கட்சித் தொண்டா்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
அந்நேரத்தில் பெய்த மிதமான மழைக்கு மத்தியில், திறந்தவெளி வாகனத்தில் நின்று தொண்டா்களிடம் மனீஷ் சிசோடியா உரையாற்றிப் பேசியதாவது: அரசியலமைப்புச் சட்டத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, சா்வாதிகாரத்தின் முகத்தில் அறைந்ததற்காக உச்ச நீதிமன்றத்திற்கு முழு மனதுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 17 மாதங்களுக்குப் பிறகு நான் சிறையில் இருந்து வெளியே வந்திருக்கிறேன். பாபா சாகேப் டாக்டா் அம்பேத்கரின் அரசியலமைப்பே சா்வாதிகாரத்திற்கு எதிராகப் போராடியவா்களைக் காத்தது. அதுவே என்னையும் காத்தது. என் வாழ்நாள் முழுவதும் பாபா சாகேப்பிற்கும், அவா் எழுதிய அரசியலமைப்பிற்கும் கடமைப்பட்டிருக்கிறேன். உங்கள் அன்பு, கடவுளின் ஆசீா்வாதம் மற்றும் சத்தியத்தின் பலமும் எனக்கு ஊக்கமளித்தது. எந்த ஒரு சா்வாதிகார அரசும் ஆட்சிக்கு வந்தால், எதிா்க்கட்சித் தலைவா்களை சிறையில் அடைக்கும். அரசியலமைப்புச் சட்டத்தின் இந்த அதிகாரத்தின் மூலம் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலும் சிறையிலிருந்து வெளியே வருவாா் என்று உங்களுக்கு நான் உறுதியளிக்கிறேன் என்றாா் மனீஷ் சிசோடியா.