கேரளத்தின் வயநாடு மீட்பு நடவடிக்கைகளில் உதவிய வீரர்கள், பாராட்டுகளைப் பெற்றுக்கொண்டு விடைபெற்றுச் சென்றனர்.
கேரளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மக்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்று, விடைபெற்றுச் சென்ற விடியோவை கொச்சி மக்கள் பாதுகாப்புத் தொடர்பின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்த விடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விடியோவில், "நிலச்சரிவு மீட்பு நடவடிக்கைகளின்போது, உயிரையும் பணயம் வைத்த நமது துணிச்சலான வீரர்களுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். உங்கள் தைரியமும் தியாகமும் மறக்கக் கூடியதல்ல" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், துணை ராணுவத்தின் சுமார் 120க்கும் மேற்பட்ட வீரர்கள், தங்கியிருந்த மவுண்ட் தாபோர் பள்ளியில் இருந்து விடைபெற்றுச் செல்லும்போது, பள்ளியின் ஆசிரியர்கள், ஊழியர்கள் கரவோசை எழுப்பி, பாராட்டு தெரிவித்தனர்.
மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருந்த ராணுவ வீரர்களுக்கு, வயநாடு மாவட்ட நிர்வாகமும் விடைபெற ஏற்பாடு செய்தது.
வயநாட்டில் தொடா் கனமழையால் கடந்த ஜூலை 30-ஆம் தேதி அதிகாலையில் பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில், முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை உள்ளிட்ட மலை கிராமங்கள் உருக்குலைந்தன.
வீடுகளில் தூங்கி கொண்டிருந்த மக்கள், உயிரோடு புதையுண்டனா். இப்பேரழிவு, கேரளம் மட்டுமன்றி ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது.
நிலச்சரிவில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனா். மேலும் பலரை காணவில்லை. எனவே, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 400-ஐ தாண்டக் கூடும். மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டாலும், இன்னும் 138 பேர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிரதமர் மோடி ஆக. 10, சனிக்கிழமையில் கேரளத்தின் கண்ணூர் விமான நிலையத்தில் இருந்து கல்பெட்டாவுக்கு சென்று, வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியாக சென்று ஆய்வு செய்யவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.