தங்கம் வென்ற நதீமும் என் மகன் போல தான்! -நீரஜ் சோப்ரா தாயார்

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நதீமும் என் மகன் போல தான் என்று நீரஜ் சோப்ரா தாயார் கூறியுள்ளார்.
நீரஜ் சோப்ரா|அர்ஷத் நதீம்| சரோஜ் தேவி
நீரஜ் சோப்ரா|அர்ஷத் நதீம்| சரோஜ் தேவிபடம் | எக்ஸ்
Published on
Updated on
1 min read

தங்கம் வென்ற நதீமும் என் மகன் போல தான் என்று நீரஜ் சோப்ராவின் தாயார் சரோஜ் தேவி கூறியுள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றது மகிழ்ச்சி, மேலும், நடப்பு சாம்பியனான நீரஜ் சோப்ராவை வீழ்த்தி தங்கம் வென்ற பாகிஸ்தானைச் சேர்ந்த அர்ஷத் நதீமும் என் மகன் போலத் தான் என்று நீரஜ் சோப்ராவின் தாயார் சரோஜ் தேவி கூறியுள்ளார்.  

பாரீஸ் ஒலிம்பிக்கில் வியாழக்கிழமை (ஆக.8) நள்ளிரவில் நடந்த ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிச்சுற்றில் 92.97 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து ஒலிம்பிக்கில் தனிநபர் சாதனை படைத்த பாகிஸ்தானைச் சேர்ந்த அர்ஷத் நதீம் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். நடப்புச் சாம்பியனான இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக இரண்டு பதக்கங்களை வென்ற மூன்றாவது இந்திய வீரராகவும், ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டுப் பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

இந்த வெற்றி குறித்து நீரஜ் சோப்ராவின் தாயார் சரோஜ் தேவி கூறும்போது, “என் மகன் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. தங்கம் வென்ற அந்த பையனும் (பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம்) என் மகன் போலத் தான். விளையாட்டு வீரர்கள் அனைவரும் கடின உழைப்புக்குப் பிறகுதான் அந்த இடத்திற்கு போயிருக்கிறார்கள். நதீமும் நல்லவர், அவரும் நன்றாக விளையாடினார். நீரஜுக்கும் நதீமுக்கும் பெரிய வித்தியாசமில்லை. அதேபோல தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் கிடைத்ததிலும் வித்தியாசமில்லை.

நீரஜும், நதீமும் போட்டிக்களத்தில் ஒருவரையொருவர் மோதிக் கொண்டாலும் நல்ல நண்பர்களாக இருக்கின்றனர். நீரஜ் சோப்ராவை ‘சுர்மா’வுடன் வரவேற்போம். நான் மகிழ்ச்சியில் இருக்கிறேன். மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்ட்டாட்டத்தில் ஈடுபட்டனர். மக்களுக்குக் கொடுக்க லட்டு தயார் செய்து கொண்டிருக்கிறோம்” என்றார்.

ஒலிம்பிக்கில் இரண்டும் முறை பதக்கம் வென்றவரான நீரஜுக்கு இந்திய உணவில் அதிக விருப்பமுள்ளது. இதனால், அவருக்கு பிடித்தமான உணவான ‘சுர்மா’ என்றழைக்கப்படும் கோதுமையினால் ஆன உப்மா மாதிரியான உணவை சமைத்து அவரை வரவேற்க அவரது உறவினர்கள் திட்டமிட்டுள்ளனர்.

மேலும், நீரஜ் சோப்ராவின் உறவினர் கமலேஷ் கூறுகையில், “86 மீட்டருக்கும் அதிகமாக 7 வீரர்கள் ஈட்டி எறிந்தனர். அதில் நீரஜ் சோப்ராவின் திறமை பாராட்டத்தக்கது. இந்த சீசனில் அவர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 88-89 மீட்டர் என்பது மிகவும் கடினமானதாக இருந்தது. இது தங்கம், வெள்ளிப் பதக்கம் வெல்வதை பற்றியது அல்ல. அவர் பதக்கம் வெல்வதற்காக தன்னால் முடிந்ததை செய்துள்ளார். இதுவும் பாராட்டுக்குரியது” என்றும் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com