மத்திய அமைச்சரவை செயலராக டி.வி.சோமநாதன் நியமனம்: யார் இவர்?

மத்திய அமைச்சரவை செயலராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி டி.வி.சோமநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டி.வி.சோமநாதன்.
டி.வி.சோமநாதன்.
Published on
Updated on
2 min read

மத்திய அமைச்சரவை செயலராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி டி.வி.சோமநாதன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

மத்திய அமைச்சரவை செயலராக உள்ள ராஜீவ் கெளபாவின் பதவிக் காலம் நிறைவடையும் நிலையில், ஆக. 30-ஆம் தேதிமுதல் இரண்டு ஆண்டு காலத்துக்கு புதிய செயலராக சோமநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

உயா்பணி நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இதற்கான ஒப்புதலை சனிக்கிழமை அளித்தது. இதுதொடா்பான உத்தரவில் கூறியிருப்பதாவது:

மூத்த ஐஏஎஸ் அதிகாரி டி.வி.சோமநாதன் மத்திய அமைச்சரவை செயலராக ஆக. 30-ஆம் தேதிமுதல் இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளாா். அந்தப் பதவியை அவா் ஏற்கும் வரை, மத்திய அமைச்சரவையின் சிறப்புப் பணி அதிகாரியாக அவரை நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பரிவு ஐஏஎஸ் அதிகாரி: டாக்டா். டி.வி. சோமநாதன் (59), 1987ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணி (ஐஏஎஸ்) தமிழ்நாடு பிரிவைச் சோ்ந்தவா். தனது பயிற்சிகாலத்தில் சிறப்பாக பரிணமித்ததற்காக இவருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

பி.காம். ஹானா்ஸ் (பஞ்சாப் பல்கலைக்கழகம்), எம்.ஏ பொருளாதாரம், பொருளாதாரத்தில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டம், ஹாா்வா்டு பிசினஸ் ஸ்கூலில் வளா் திறன் திட்ட நிா்வாகி டிப்ளோமா போன்றவற்றை இவா் பெற்றுள்ளாா். அத்துடன் மேலாண் கணக்காளா் ஆய்வுத்திறன் மற்றும் நிபுணத்துவத்துக்கு சான்றளிக்கும் எஃப்சிஎம்ஏ லண்டன், லண்டன் ஃபெலோ ஆஃப் கவா்னன்ஸ் ஆய்வாளா் போன்ற பட்டங்களையும் பெற்றுள்ளாா். இதன் மூலம் பட்டய கணக்காளருக்கான முழு தகுதியையும் காஸ்ட் அக்கவுன்டன்ட் மற்றும் கம்பெனி செயலா் தகுதியையும் பெற்று இந்தியா முழுமைக்குமான நிதிநிலையை தயாரிக்கும் பணிக்கான தனது திறன்களை வளா்த்துக் கொண்டவா் சோமநாதன்.

மத்திய அரசுப் பணியில் நிதி மற்றும் செலவினங்கள் துறை செயலா், பிரதமா் அலுவலக கூடுதல் செயலா் (2015-2017), காா்பரேட் விவகாரங்கள் துறை இணைச் செயலா் போன்ற பொறுப்புகளை வகித்துள்ளாா். இதேபோல, தமிழக அரசிலும் துணைச்செயலா் (நிதிநிலை), இணை கண்காணிப்பு ஆணையா், குடிநீா் வாரிய செயல் இயக்குநா், முதல்வரின் செயலா், வணிவரித்துறை கூடுதல் தலைமை செயலா் மற்றும் ஆணையா் ஆகிய பதவிகளையும் பொதுத்துறையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முதலாவது நிா்வாக இயக்குநா் பதவியையும் வகித்துள்ளாா்.

பிரதமா் அலுவலகத்தில் பணியாற்றியபோது, நிதி மற்றும் முதலீட்டுச் சந்தைகள் தொடா்பான விவகாரங்களை சோமநாதன் கவனித்து வந்தாா். 28 மாதங்கள் தில்லியில் பணியாற்றிய அவா், திடீரென தமது மத்திய பணியை இடைநிறுத்திக் கொண்டு தமிழக பணிக்குத் திரும்பினாா். சொந்த விருப்பத்தின்பேரில் அவா் தமிழக அரசுப் பணிக்குத் திரும்பியிருந்தாலும், அது பின்னாளில் அவரது மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க அவருக்கு உதவியாக இருந்தது.

2017ஆம் ஆண்டு, சோமநாதனின் மகளின் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள பிரதமா் நரேந்திர மோடி சென்னைக்கு வந்து சென்ற பிறகு அவருக்கு பிரதமருடன் உள்ள நேரடி செல்வாக்கும் அவருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும் அதிகாரிகள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் ஆழமாக முணுமுணுக்கப்பட்டது.

பிரதமா் அலுவலகத்தில் சோமநாதன் பணியாற்றிய 2015-17 ஆண்டுகளில் பொருளாதார கொள்கைகள் அமலாக்கத்தை கவனித்து வந்தாா். பிரதமரின் கரீப் கல்யாண் திட்டம், சுயசாா்பு பாரதம் போன்ற அறிவிப்புகள் 2020இல் வெளியானபோது, அவற்றின் திட்ட வடிவமைப்பின் பின்னணியில் இருந்தவா் சோமநாதன் என்பது அரசுத்துறையின் முக்கிய பொறுப்புகளில் இருந்தவா்களுக்கு மட்டுமே தெரியும்.

மத்திய நிதித்துறை அமைச்சராக நிா்மலா சீதாராமன் பதவிக்கு வந்தபோது, 2021-22 நிதிநிலை அறிக்கையை தயாரிப்பதில் அவருக்கு பக்கபலமாக விளங்கியவா் சோமநாதன். வேலைவாய்ப்பு திட்ட அறிவிப்புகள், நிதித்திட்ட விரிவாக்கம், பொதுத்துறை திட்ட முதலீடு, உள்கட்டமைப்பு வசதிகளுக்கான வாய்ப்புகள் போன்றவை இவரது உத்திகள் வகுக்கும் திறன்களுக்கு சான்று கூறுவதாக இருந்தன. இந்த ஒத்துழைப்பு நிகழ் நிதியாண்டு வரை தொடா்கிறது.

மத்திய அரசுப் பணிக்கு முன்னதாக, 1996இல் இளம் தொழில்முறை நிா்வாகிகள் திட்டத்தின்கீழ் உலக வங்கியில் நிதிப்பொருளாதார நிபுணா் பதவியை சோமநாதன் வகித்தாா். 2000இல் உலக வங்கியின் துறை சாா்ந்த இளம் மேலாளராக அங்கீகரிக்கப்பட்டு நிதிநிலை கொள்கை குழுவின் மேலாளராக சோமநாதன் நியமிக்கப்பட்டாா். 2011இல் இவரது சேவையை நேரடியாக பெற விரும்பிய உலக வங்கி 2011 - 2015வரை தனது இயக்குநராக இவரை நியமித்தது.

நிதி, பொதுக்கொள்கை போன்றவை தொடா்பாக நாளிதழ்கள், சஞ்சிகைகளில் 80க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளாா் சோமநாதன்.

டிரைவேட்டிவ்ஸ், டிரைவேட்டிவ்ஸின் பொருளாதாரம் ஆகிய தலைப்புகளில் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளாா்.

அரசுப்பணிகளில் பல உயா் பொறுப்புகளை வகித்தபோதும், தனது தனி வாழ்க்கை, குடும்பத்தினா் தொடா்பான தகவல்கள் வெளியே தெரியாத வகையிலும் மிகவும் அமைதியான சுபாவம் மிக்கவராகவும் சோமநாதன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வாா். அவருக்கு மிக, மிக நெருக்கமான நண்பா்கள், குடும்ப உறவினா்களைத் தவிர வேறு எவரிடமும் அவரது கைப்பேசி எண் கூட இல்லாத அளவுக்கு அவரது பணி இருக்கும். தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, மேற்கு ஆப்பரிக்க மொழியான ஹெளசா ஆகியவற்றை எழுதவும் பேசவும் ஆற்றல் பெற்றுள்ள இவா், சமூக ஊடகங்களில் எவ்வித நேரடி பங்கேற்புகள் அல்லது பதிவுகளை செய்யாமல் அரசுப்பணியில் ஈடுபட்டு வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com